தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கு

தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கு
X
தென்காசி அருகே நடந்த கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கு நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா சட்டமன்ற நாயகர் - கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம் முன்னாள் பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் மற்றும் முன்னாள் பேரவைச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் இன்று 04.10.2023வியாசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சுப்பிரமணியபுரம், வாசுதேவநல்லூர் மற்றும் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளி, T.N. புதுக்குடி, புளியங்குடி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தெரிவித்ததாவது:-

ஐந்து முறை முதல்வராக பதவிவகித்த தலைவர் கலைஞர் கருணாநிதி தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும் ஐந்து முறை தமிழக முதல்வராகவும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக (1957 - 2018) தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். தான் போட்டியிட்ட எந்த சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வியை சந்திக்காதவர்.நில உச்சவரம்பு 15 ஏக்கராகக் குறைக்கப்பட்டது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது, அனைவரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவந்தது, நீராடும் கடலுடுத்த பாடலை மாநில வாழ்த்துப்பாடலாக அறிவித்தது, பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சம உரிமை, அரசுப் பணிகளில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு, மெட்ரோ ரயில் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரம், உழவர் சந்தை, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடு, என தன்னுடைய 19 வருட ஆட்சியில், தமிழகத்தை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மாற்றியமைத்தவர் கருணாநிதி.

இவ்வாறு அவர் கூறினார்.

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார் பேசும்போது கருணாநிதி ஆற்றிய பணிகளை பேச நூற்றாண்டுகள் பல வேண்டும் நெஞ்சுக்கு நீதி என்னும் அவரது புத்தகத்தில் அவரது அரசியல் அனுபவங்களை விரிவாக விளக்கியுள்ளார். தமிழ்நாட்டை சீரிய நாடாக உருவாக்கிய சிற்பி. சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கல்வி செல்வத்தை மாணவர்களுக்கு அளித்தவர் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கருணாநிதியின் படைப்புகளில் சமூக நீதி என்ற தலைப்பில் பேசிய மாணவி கு. காவிய பிரியா முதல் பரிசையும் தமிழ் மொழியின் எழுச்சிக்கு கலைஞர் செய்த சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் பேசிய மாணவி க.சூரியகலா இரண்டாவது பரிசையும் ,மகளிர் நலனில் கலைஞர் என்ற தலைப்பில் பேசிய மாணவி மு.சாகிதா மூன்றாம் பரிசையும் வென்றனர்.

இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது என்ற தலைப்பில் பேசிய மாணவர்களில் மாணவி ரா. எழிலரசி ,அரசு மேல்நிலைப்பள்ளி வாசுதேவநல்லூர் முதல் இடத்தையும் கி கவிஷா, அரசு மேல்நிலைப்பள்ளி கரிவலம்வந்தநல்லூர் இரண்டாவது இடத்தையும், சு. ராமர் ,அரசு மேல்நிலைப்பள்ளி சேர்ந்தமங்கலம் மூன்றாவது இடத்தையும் வென்றனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா 'சட்டமன்ற நாயகர் கலைஞர்' கருத்தரங்கத்தில், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன் சிறப்பாக உரையாற்றிய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் நாகராஜன் இணைச்செயலாளர் சாந்தி துணைச் செயலாளர் ரேவதி சார்பு செயலாளர் வரதராஜன் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, புளியங்குடி நகர் மன்ற தலைவர் விஜயா சௌந்தரபாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி முதன்மை கல்வி அலுவலர் முத்தையா சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த், வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்து நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!