மான்வேட்டை, பத்து பேருக்கு 10 லட்சம் அபராதம்
தென்காசி மாவட்டம் சிவகிரி மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் தொடர்ந்து மான் வேட்டையில் ஈடுபட்டு வந்த பத்து நபர்களை கைது செய்த வனத்துறையினர் அவர்களுக்கு ரூ. பத்துலட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர் .
தென்காசி மாவட்டம் சிவகிரி மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக சிவகிரி வனச்சரகர் சுரேஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது . குறிப்பாக தேவியார்பீட் பகுதியில் வேட்டைக்கும்பல் துப்பாக்கியுடன் சுற்றித்திரிவதாகவும் தகவல் வந்தது. இதனையடுத்து வனப்பகுதி முழுவதும் சுழற்சி முறையில் இரவு, பகல் நேரங்களில் வனத்துறையினர் மாறு வேடத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது தேவியார்பீட் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி, அருண்குமார், பிரபாகர் ஆகிய மூன்று பேரை சுற்றி வளைத்து கைது செய்து விசாரித்ததில் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு கார், இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஒரு நாட்டுத்துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து மூன்று பேருக்கும் ரூ. நான்கரை லட்சம் அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து இவர்களுடன் தொடர்புடைய மான் வேட்டை கும்பல்களை வனச்சரகர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமர், சின்னராசு, செல்வம், சக்திவேல், இராஜேந்திரன், சன்னாசி, இராஜா, உட்பட ஏழு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட மான், உடும்பு, காட்டுபன்றிகளை வேட்டையாடி வியாபாரம் செய்ததாக ஒப்புக்கொண்டதை தொடர்ந்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.75 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu