தென்காசியில் கால்நடை மருத்துவ முகாமை துவங்கி வைத்த அமைச்சர்

கால்நடை மருத்துவ முகாமினை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தென்காசி பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரியில் கால்நடை மருத்தகம் மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள், மாறாந்தை, பொட்டல்புதூர், ஆய்க்குடி மற்றும் வல்லம் ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டிடங்கள், அரியபுரத்தில் கால்நடை மருந்தகம், புல்லுக்காட்டுவலசையில் கிளை நிலையங்கள் ஆகியவற்றை தமிழக கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார். இதன் துவக்க விழா குறும்பலாப் பேரியில் நடந்தது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தமிழ் செல்வி, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக மீனவர், மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று புதிய மருந்தகம் மற்றும் மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்து பேசியதாவது,
தமிழகத்தில் பொதுமக்களுக்கு வரும் முன் காக்கும் திட்டம் இருப்பது போன்று கடந்த 2000ம் ஆண்டில் கால்நடைகளுக்கும் வரும் முன் காப்போம் திட்டத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார்.
தற்போது தமிழகத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்களை நடத்திட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் முதலாவது சிறப்பு முகாம், தென்காசி மாவட்டம் குறும்பலாப்பேரியில் துவங்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கோழி தட்டுபாட்டை போக்குகின்ற வகையில் நாட்டுக் கோழி பெருக்கத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கிராம மக்கள் அதிகளவு பயன் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் நடத்தப்பட்ட கால்நடை கண்காட்சியில் இடம்பெற்ற விவசாயிகளுக்கு பரிசுகளை அமைச்சர் வழங்கினார். இந்த விழாவில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், யூனியன் சேர்மன்கள் காவேரி, திவ்யா, ஷேக் அப்துல்லா மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu