குற்றாலத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு
குற்றாலம் வனத்துறை அலுவலகம் அருகே, மரத்தில் இருந்த மலைப்பாம்பை தீயணைப்பு துறை குழுவினர் பத்திரமாக பிடித்து, வனப்பகுதிக்குள் விட்டனர்.
HIGHLIGHTS

குற்றாலம் வனத்துறை அலுவலகம் அருகே, மரத்தில் இருந்த மலைப்பாம்பை தீயணைப்பு துறை குழுவினர் பிடித்தனர்.
தென்காசி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெயில் அதிகளவில் வாட்டி வதைக்கிறது. இதனைத் தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளும், வறண்ட நிலையில் காட்சியளித்தது.
இதனால் மலைப்பகுதியில் வாழும் வனவிலங்குகளான யானை சிறுத்தை கரடி மான் கடாமான், பாம்புகள் உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் நீர் தேடி மலை அடிவாரப் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதும், குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வழக்கமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை குற்றாலம் ஐந்தருவி செல்லும் சாலையில், வனத்துறை அலுவலகம் அருகே மரம் ஒன்றில் மலைப்பாம்பு இருப்பதாக தென்காசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து நிலைய அலுவலர் ரமேஷ், போக்குவரத்து நிலைய அலுவலர் சுந்தரம், ஜெயரத்னகுமார் ஆறுமுகம் கார்த்திகேயன், சுந்தர் , ஜெகதீஷ் ஆகியோர் அடங்கிய தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரத்தில் உள்ள மலைப் பாம்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறையினர் இந்த மலைப் பாம்பை அடர்வனப் பகுதியில் கொண்டுபோய் விட்டனர். மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.