தென்காசி அருகே நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழப்பு
நாய்கள் கடித்து குதறியதில் இறந்த புள்ளி மான்
தென்காசி அருகே விளை நிலங்களில் புகுந்த புள்ளிமானை கடித்து குதறிய நாய்கள் - 5 வயது மதிக்கத்தக்க ஆண் மான் பலியானது.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளை கொண்டது. இங்குள்ள விளை நிலங்களில் நெல்,காய்கறி வகைகள், கிழங்கு வகைகள் ஆகியவற்றை பயிரிட்டு வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மான், மிளா, கரடி, யானை போன்ற மிருகங்கள் வசித்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது உணவுக்காக விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது. இது தொடர்பாக விவசாயிகள் பலமுறை வனத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் சென்ற சிலரை கரடி தாக்கி படுகாயத்தை ஏற்படுத்தியது இது போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற வரும் சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் வனவிலங்குகளின் பாதிப்பு தென்காசி மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.
இந்த வனப் பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதே போன்று அரிய வகை மான்கள் விளை நிலங்களுக்கு வரும் போது தெருநாய்களின் பிடியில் மான்கள் சிக்கி உயிரிழக்கும் சம்பவமும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன்குளம் கிராமம் அழுதகன்னி ஆற்றுப் படுகை ஓரம் அமைந்துள்ள விளை நிலங்களில் ஒரு புள்ளிமான் வந்ததை பார்த்த தெருநாய்கள் புள்ளிமானை கடித்து குதறியது. இதில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்தது.
இதை பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கிராம மக்களின் உதவியுடன் புள்ளி மானை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.ஏற்கெனவே கடந்த வாரம் இதே பகுதியில் மேலமெஞ்ஞானபுரம் கிராமத்தின் இரும்பு வேலியில் சிக்கி புள்ளி மான் ஒன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu