தென்காசி அருகே பிரபாகரன் 70 -வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
தென்காசி அருகே விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தமிழீழ விடுதலை புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர், பொது மக்களுக்கு மரக்கன்றுகளையும் இனிப்புகளையும் வழங்கி கொண்டாடினர்.
நமது அண்டை நாடான இலங்கையில் தனி தமிழீழம் கேட்டு ஆயுத போராட்டம் நடத்தியவர் தமிழீழ விடுலைப்புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
உலகத் தமிழர்களின் தமிழ் தேசியத் தலைவராக கருதப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் 1954 ஆம் ஆண்டு பிறந்தார். இலங்கையில் நடந்த இறுதி போரில் பிரபாகரன் உள்பட அவரது இயக்க தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் உயிருடன் இருப்பதாக அவரது ஆதரவாளர்களால் நம்பப்பட்டு வருகிறது.இன்று வரை அவ்வப்போது அவர் விரைவில் வெளி உலகத்திற்கு வருவார் என்றெல்லாம் கூட கூறப்பட்டது. ஆனால் அதுபோல் எதுவும் நடக்கவில்லை.
இது ஒருபுறம் இருக்க பிரபாகரனின் 70- வது பிறந்த நாள் விழா இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி விலக்கு பகுதியில் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மரக்கன்றுகளையும், இனிப்புகளையும் பொது மக்களுக்கு வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சிக்கு இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜமீன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மா, பலா, கொய்யா, புங்கை உள்ளிட்ட அரிய வகை மரக்கன்றுகளை பொதுமக்கள் நட்டு இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்கிற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இயற்கை வள பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் ஜோசப் ரத்தினம், இசக்கி செல்வம் பாக்கியராஜ், வீரமணி, நகுலன், ஐயப்பன், சார்லஸ் முத்துராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu