தோரணமலை முருகன் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
தோரணமலை முருகன் கோவிலில், கிரிவலம் சென்ற பக்தர்கள்.
Tiruvannamalai Girivalam - தென்காசி மாவட்டம், கடையம் அருகே தோரணமலை உள்ளது. அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்களால் வழிபட்ட பெருமையுடையது. மலைமீது குகையில், முருகன் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அகஸ்தியர் தங்கி இருந்தபோது,
அப்பகுதியில் வாழ்ந்து வந்த ஒருவர், தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அப்போது இங்கு வசித்து வந்த அகஸ்தியரிடம் வந்து சிகிச்சை பெற்றார். முதல் முறையாக, அங்கு கபால அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அவரது தலையின் உள்ளே, தேரை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அகஸ்தியர் தனது சீடருடன், அந்த நபருக்கு கபால அறுவை சிகிச்சை செய்த போது, சிக்கலான மூளை நரம்பு பகுதி என்பதால், தேரையை வெளியே எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது அகஸ்தியரின் சீடர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, கபாலம் அருகே வைத்தார். தண்ணீரைப் பார்த்ததும் தேரை மூளை பகுதியிலிருந்து வெளியே தண்ணீர் குதித்தது. அன்று முதல் அகஸ்தியரின் சீடருக்கு, 'தேரையர்' என்று பெயர் வந்தது.
மேலும் இந்த மலைப்பகுதியில் அதிகமான மூலிகை செடிகள் இருப்பதால், ஏராளமான சித்த வைத்தியர்கள் இங்கு வந்து முருகனை வழிபட்டு மூலிகைகளை பறித்து செல்கின்றனர்.
மாதந்தோறும் தோரணமலையை சுற்றி கிரிவலம் நடந்து வருகிறது. புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தில், திரளான பக்தர்கள் தோரணமலை முருகனுக்கு 'அரோகரா' என்ற சரண கோஷம் முழங்க, பக்தி பஜனை பாடல்கள் பாடியபடி, 5 கிலோமீட்டர் சுற்றளவுள்ள மலையை சுற்றி, கிரிவலம் வந்தனர்.
முன்னதாக மலைமேல் உள்ள முருகனுக்கு பால், பன்னீர், தயிர், இளநீர், மஞ்சள் பொடி, திரவியம், மாபொடி, பஞ்சாமிர்தம் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் தீபாராதாரனைகளும் நடைபெற்றது.
கிரிவலம் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்க பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
மலையை சுற்றி மூலிகைகள் நிறைந்து காணப்படுவதால், கிரிவலம் சென்று வந்த பக்தர்கள் கூறும்போது, 'பவுர்ணமி அன்று இந்த மலையை சுற்றி வருவதால், பல்வேறு வகையான நோய்கள் நீங்கி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. பவுர்ணமி நிலவொளியில், மலையை சுற்றி வரும்போது, மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அந்த வேளையில் மூலிகை காற்றை சுவாசிக்கும் போது, உடலும், மனதும் ஆரோக்கியமாக உள்ளது. பக்தி பரவசத்துடன், முருகனை வழிபட்டபடி கூட்டமாக நடக்கும்போது, நடக்கும் சிரமமே தெரிவது இல்லை. மாதந்தோறும், பவுர்ணமி நாளில், மூலிகை காற்றை சுவாசித்தபடி இவ்வாறு கிரிவலம் வந்தால், உடலில் உள்ள அனைத்து நோய்களும் குணமாகிவிடும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது, என்று தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu