தென்காசி பஸ் நிலையம் அருகில் உள்ள மதுபான கடையை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மனு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பாஜக ஸ்டார்ட் அப் பிரிவு மாநிலத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி வருகை தந்த போது எடுத்த படம்
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபானக் கடையை அகற்றுங்கள் என மாவட்ட ஆட்சியரிடம் பாஜக ஸ்டார்ட் அப் பிரிவு மாநில தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை மனு அளித்தார்.
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு உள்ள அரசு மதுபானக்கடையை அகற்றும்படி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோரிடம் பாஜக ஸ்டார்ட் அப் பிரிவு மாநில தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த பகுதியில் அரசுப்பள்ளி, அரசு மருத்துவமனை, குடியிருப்பு, பேருந்து நிலையம் இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் ஸ்டார்ட் அப் பிரிவு மாநில தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு உள்ள அரசு மதுபானக் கடை (கடை எண் : 10697) பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக செயல்படுகிறது. அருகில் ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தென்காசி மாவட்ட புதிய காவல் கண்பாணிப்பாளர் அலுவலகம், அரசு சார்ந்த அலுவலகங்கள், திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு, மக்கள் அதிக அளவில் கூடும் புதிய பேருந்து நிலையம் என பொதுமக்கள் பயன்பாடுகள் கொண்ட பகுதியில் அமைந்துள்ளது.
இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு போக்குவரத்திற்கு இடையூறு, பொதுமக்களுக்கு இடையூறு என பல தொந்தரவுகள் ஏற்படுகிறது. ஆகையால் புதிய பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றினால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்காசி மக்கள் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். இளைஞர்களை, சமுதாயத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களுக்கு எதிராக குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறோம். தென்காசி புதிய பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையால் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அந்த கடையை அகற்றும்படி ஆட்சியரிடம் வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் 4800க்கு அதிகமான டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. ஆனால் 2200 ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான் உள்ளன. மதுபானக் கடைகளைவிட பாதியளவு கூட ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லை. அதேப்போல அரசின் மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கையும் வெகுசொர்ப்பமாக 11 என்கிற அளவில்தான் உள்ளன. மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக கொடுக்கப்பட வேண்டிய கல்வியும், மருத்துவமும் குறைந்த அளவில் இருக்குறது. ஆனால் சாராயம் விற்கக் கூடிய டாஸ்மாக் மதுபானக் கடைகள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலை மாற வேண்டும். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம், என்றார்.
கோரிக்கை மனு அளித்தபோது, தென்காசி நகராட்சி கவுன்சிலர்கள் சங்கரசுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், இராஜ்குமார் வழக்கறிஞர்கள் சித்து, வெங்கடாசலபதி, தென்காசி வடக்கு ஒன்றிய தலைவர் ஐயப்பன், இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் சங்கரநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu