காசி விஸ்வநாதர் கோவில் தேரோட்டம்; தென்காசியில் பக்தர்கள் பரவசம்

Shri Kashi Vishwanath Temple -தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

காசி விஸ்வநாதர் கோவில் தேரோட்டம்; தென்காசியில் பக்தர்கள் பரவசம்
X

சிவகாமி அம்மன் தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

Shri Kashi Vishwanath Temple -தென்காசி, காசி விஸ்வநாத சுவாமி ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவில் இன்று, அம்பாள் திருத்தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தென்காசியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காசிவிஸ்வநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில், விந்தன் கோட்டை தலைநகராகக் கொண்டு பராக்கிரம பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான். தீவிர சிவபக்தர் ஆன பராக்கிரம பாண்டியன் தினமும் ஆகாய மார்க்கமாக காசி சென்று காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து வந்தார்.

அவ்வாறு ஒரு நாள் அவரால் காசிக்கு செல்ல முடியவில்லை. இதனால் மனம் உடைந்த மன்னன் இறைவனிடம் தீவிரமாக வேண்டினான். அப்போது அவரது கனவில் தோன்றிய சிவபெருமான் உன் கோட்டையில் இருந்து சிற்றெறும்புகள் செல்லும் பாதையில் பயணி. அது முடிவும் இடத்தில் எனக்கு ஒரு கோவிலை எழுப்பு, என்று கூறிவிட்டு மறைந்தார்.

அதேபோல், கோட்டைவாசல் இருந்த சிற்றெறும்பு கூட்டத்தை பின் தொடர்ந்து வந்த மன்னன், 10 கிலோமீட்டர் தாண்டி செண்பகவன காட்டுக்குள் அந்த எறும்பின் கூட்டம் நின்றது. பகுதியில் மிகப்பெரிய சிவாலயத்தை கட்டி எழுப்பினார் பராக்கிரம பாண்டியன். இவ்வாறு இந்த கோவிலில் தல வரலாறு தெரிவிக்கிறது. திருக்கோவிலில் தல விருட்சமாக செண்பக மரம் உள்ளது.

அழகிய சிற்பங்களை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா, கடந்த 12-ம் தேதி அன்று உலகம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகளும், கோவிலில் இருந்து தினமும் உலகம்மன் பூங்கோயில் வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம், பல்லாக்கு சயனம் வாகனம், கிளி வாகனம் ஆகிய சப்பர வீதி உலாவும், திருவிழாவின் 9-ம் நாளான இன்று உலகம்மன் திருத்தேரோட்டம் நடந்தது. முன்னதாக அதிகாலை கோவிலில் இருந்து உலகம்மன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், இதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருத்தேரோட்டம் நடந்தது.

விழாவின் முக்கிய நாளான வருகிற 22-ம் தேதி, மாலை உலகம்மனுக்கு காசி விஸ்வநாத சுவாமி காட்சி கொடுக்கும் தபசு காட்சியும், இரவு கோவிலில் வைத்து சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் முருகன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர். தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் உட்பட ஏராளமான காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 Oct 2022 11:15 AM GMT

Related News