97 வயது மூதாட்டிக்கு அறுவைச் சிகிச்சை.. தென்காசி அரசு மருத்துவர்கள் சாதனை…

97 வயது மூதாட்டிக்கு அறுவைச் சிகிச்சை.. தென்காசி அரசு மருத்துவர்கள் சாதனை…
X

தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இசக்கியம்மாள்.

தென்காசியில் 97 வயது மூதாட்டிக்கு வெற்றிக்கரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

உடல் நிலை பாதிக்கப்பட்டால் ஏழை எளிய மக்கள் உடனடியாக செல்வது அரசு மருத்துவமனையை நோக்கிதான். அரசு மருத்துவமனைகள் என்றால் சிகிச்சை சரியாக இருக்காது என்ற நிலை இருந்து வந்தது சமீப காலமாக மாறி வருகிறது என்றே கூறலாம்.

குறிப்பாக கொரோனா நோய் தொற்று பரவல் காலத்தில் அரசு மருத்துவர்களின் பணி சிறப்பானதாகவே இருந்தது என பொதுமக்கள் தரப்பில் இருந்து பாராட்டு குவிந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பான உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றே கூறலாம்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வந்த பிறகு, ஏராளமானோர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக பல சிக்கலான மற்றும் விபத்தால் ஏற்படும் பெரிய காயங்களுக்கு உடனடியாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், நோயாளிகள் முழுமையாக குணமாகும் வரை தேவையான அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 97 வயது மூதாட்டிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளனர் மருத்துவர்கள்.தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வடகரையை சேர்ந்த சங்கிலிமாடன் மனைவி இசக்கியம்மாள். 97 வயது மூதாட்டியான இவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு (TROCHANTER FRACTURE) கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உடனடியாக எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்வதற்கு எலும்பு முறிவு மருத்துவர்களால் முடிவெடுக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்வதற்காக மயக்க மருந்து கொடுக்க வேண்டிய பரிசோதனைகள் அனைத்தும் துரிதமாக செய்யப்பட்டு இருதய சிறப்பு சிகிச்சை மருத்துவர் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் குழு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இடுப்பு எலும்பிற்கு சிறிய துளை மூலம் கம்பி பொருத்தி அறுவை சிகிச்சை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது . அறுவை சிகிச்சை பின் கவனிப்பு பகுதியில் நோயாளி இசக்கியம்மாள் தற்போது நலமுடன் இருக்கிறார்.

97 வயதில் இந்த சிக்கலான எலும்பு முறிவு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய எலும்பு முறிவு மருத்துவர்களுக்கும், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பொது மருத்துவர்கள், இருதய மருத்துவர் மற்றும் மயக்கவியல் மருத்துவர்களுக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்ஸின் பாராட்டுகளை தெரிவித்தார்.

தென்காசி மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமலதா தென்காசி மருத்துவர்கள் அனைவரையும் வெகுவாக பாராட்டினார். 97 வயதுடைய மூதாட்டிக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேற்கொண்ட தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி