தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் தற்கொலை முயற்சி

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் தற்கொலை முயற்சி
X

பட விளக்கம்: ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை தொடர்ந்து விசாரணை செய்த போது எடுத்த படம்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு.

தென்காசி மாவட்டம், பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த ஆமினாள் என்பவர், அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவரிடம் சுமார் 4 சென்ட் நிலத்தை ரூ.12 லட்சத்திற்கு, கடந்த 2022-ம் வருடம் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், தான் வாங்கிய நிலத்திற்கு ஆமினாள் பட்டா கோரி ஆன்லைனில் விண்ணப்பம் செய்திருந்தார். இந்த பட்டா மீதான விண்ணப்பம் குறித்து பொட்டல்புதூர் கிராம நிர்வாக அலுவலர் சுடர்செல்வம் விசாரணை செய்துள்ளார்.

அப்போது, ஆமினாள், சுபாஷிடம் இருந்து வாங்கியதாக கூறப்படும் நிலத்தின் சர்வே எண்ணான 520/7B என்ற நிலமானது, ஆமினாள் காட்டிய அந்த நிலம் இல்லை எனக் கூறி பட்டா விண்ணப்பத்தினை விஏஓ நிராகரிப்பு செய்துள்ளார்.

இது தொடர்பாக ஆமினாள், அவர் நிலம் வாங்கிய சுபாஷ் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் முறையாக எந்த பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் சுபாஷ், ஆமினாளுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த இடமானது அரசு நிலம் என்பதும் தெரிய வந்துள்ளது.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆமினாள் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத சூழலில், இன்று ஆமினாள் தனது கணவரான நாகூர்மீரான் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வந்து தலையில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார், தீக்குளிக்க முயற்சி செய்த குடும்பத்தினரின் தலையில் தண்ணீர் ஊற்றி அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

அதன்பேரில், தற்போது பொட்டல்புதூர் பகுதிக்கு அந்த குடும்பத்தினரை அதிகாரிகள் அழைத்துச் சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்த சென்றுள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் புகுந்து ஒரு குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு