60 ஆண்டு கால இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை

60 ஆண்டு கால இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை
X

இரட்டைக் குளத்தில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாய்

20 கிராமங்கள் பயன்பெறும் வகையில் உள்ள இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை நடப்பு கூட்ட தொடரில் நிறைவேற்றவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தள்ளனர்.

தேர்தல் பரப்புரையில் கொடுத்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றாததால் 60 ஆண்டு கால இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தென்காசி மாவட்டத்தில் கருப்பா நதி, அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கம், ராமநதி, கடனாநதி, குண்டாறு அணை ஆகிய 5 அணைகள் மூலம் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேரில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ள நிலையில், சுரண்டை சுற்று வட்டார பகுதிகளான ஆலடிப்பட்டி, கீழச் சுரண்டை, வாடியூர், சோலைச்சேரி, ஊத்துமலை என சுமார் 20 கிராம விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 1962-ஆம் ஆண்டு காமராசர் ஆட்சி காலத்தில் இரட்டைகுளம் முதல் ஊத்துமலை பெரியகுளம் வரையிலான சுமார் 25 கி.மீ தொலைவிற்கு இணைப்பு கால்வாய் அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் அந்த திட்டம் தற்போது வரை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள நிகழ்வு விவசாயிகளை வேதனை அடையக்கூடிய செயலாக உள்ளது.

இதனால் இப்பகுதியில் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாத சூழலில், பலர் விளை நிலங்களை தரிசுகளாக விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லக் கூடிய நிலையில், தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை மட்டுமே நம்பியே ஒரு சில கிராமங்களில் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பருவமழைகள் பெய்யும் போது நீரானது வீணாக கடலில் கலக்கிறது.

இத்திட்டத்தை நிறைவேற்றினால், 20 கிராம மக்கள் பயன் பெறுவார்கள், மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு போக்கப்படும். கால்நடை வளர்ச்சிகளுக்கும் உதவியாக இருக்கும் என்று தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் சட்டப்பேரவையில் கோரிக்கைகள் வைத்தும் இதுவரை திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படாமல் இருப்பது 20 கிராம விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது.

மேலும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆலங்குளம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் இத்திட்டத்திற்கான கால்வாய் அமைத்து தரப்படும் என வாக்குறுதி கொடுத்த நிலையில், இத்திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெறாமல் இருப்பது சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட விவசாயிகளையும், பொதுமக்களையும் ஏமாற்றமடைய செய்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

60 ஆண்டு காலமாக ஆட்சிகள் மாறுகிறதே தவிர எங்களின் அவல காட்சி மாறவில்லை. தற்போதுள்ள தி.மு.க ஆட்சியில் தற்போது நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்ட தொடரில் இது தொடர்பான நல்ல அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், பெருத்த ஏமாற்றத்தையே விவசாயிகள் சந்தித்துள்ளனர்.

20 கிராம விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். இல்லையெனில் 60 ஆண்டு கால போராட்டம் தீவிரமடையும் என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!