தென்காசியில் ‘என் மண் என் மக்கள்’ பாஜகவின் இரண்டாம் கட்ட பாத யாத்திரை தொடக்கம்

தென்காசியில் ‘என் மண் என் மக்கள்’ பாஜகவின் இரண்டாம் கட்ட பாத யாத்திரை தொடக்கம்
X

பாதயாத்திரையில் மின்விளக்கு இல்லாததால் அலைபேசி ஒளியுடன் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை.

தென்காசியில் 4 மணி நேரமாக நடைபெற்ற என் மண், என் மக்கள் நடைபயணத்தின் போது, போதிய மின் விளக்குகள் எரியாததால் செல்போன்களில் டார்ச் லைட்டை ஒளிரவிட்டபடி பாஜகவினர் நடை பயணத்தை மேற்கொண்டனர் .

என் மண், என் மக்கள் நடைபயணத்தின் 2-வது கட்ட நடைபயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியில் இருந்து தொடங்கிய நிலையில், மாலை சுமார் 6 மணியளவில் தென்காசி தொகுதிக்கு உட்பட்ட கீழப்புலியூர் பகுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் தனது நடைபயணத்தை தொடங்கினார்.

தொடர்ந்து, தென்காசி சந்தை அருகே நடைபயணம் வருகை தந்த போது, முளைப்பாரி எடுத்து பெண்கள் அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, காசிவிஸ்வநாதர் ஆலய திருக்கோயில் தெற்குரதவீதி வழியாக தென்காசி பழைய பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த நடை பயணமானது தென்காசி ரயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, போதிய மின்விளக்குகள் எரியாததால் தொண்டர்கள் செல்போன்களில் டார்ச் லைட்டை எரியவிட்டபடி நடைபயணத்தை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, புதிய பேருந்து நிலையத்திற்கு இரவு சுமார் 9.50 மணிக்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, புதிய பேருந்துநிலையம் எதிரே தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, தென்காசியில் இன்று கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும் போது, 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி.

கண்டிப்பாக, இந்த மாதம் கண்டிப்பாக பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு தொண்டர்கள் மத்தியில் கண்டிப்பாக உரையாற்றுவேன் என நேரமின்மையால் 2 நிமிடத்தில் பேச்சை முடித்தார்.

இன்று மாலை 3 மணிக்கு கடையநல்லூரில் பாதயாத்திரை தொடங்கி கிருஷ்ணாபுரத்தில் முடிவடைகிறது. அதேபோன்று மாலை 5 மணிக்கு புளியங்குடி எலுமிச்சை சந்தை அருகே தொடங்கி சிந்தாமணி பேருந்து நிலையத்தில் முடிவடைகின்றது. பாதுகாப்பு ஏற்பாட்டினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!