தென்காசியில் மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்படும்: காந்திராஜன் தகவல்
செய்தியாளர்கள் சந்திப்பில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு பணிகளை மேற்கொண்டது. அதை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் மற்றும் மதிப்பீட்டுக் குழு தலைவர் காந்தி ராஜன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மதிப்பீட்டு குழு தலைவர் காந்தியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் புதிய கோட்ட கால்நடை உதவி இயக்குனர் அலுவலகம் சங்கரன்கோவிலில் அமைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
தென்காசி மற்றும் பாவூர்சத்திரத்தில் கால்நடை மருந்தகம் மருத்துவமனையாக உயர்த்த வேண்டும்
மிகவும் பிற்படுத்தப்பட்ட விடுதிகளை சீரமைப்பு, உபகரணங்கள் வாங்குவது என பல்வேறு வசதிகள் செய்து தரக்கோரி உள்ளனர். இவை அனைத்தையும் குழு பரிந்துரை செய்யும்.
தென்காசி மற்றும் சுரண்டை நகராட்சி பகுதியை சுற்றி புறவழிசாலை அமைக்கவும் சிபாரிசு செய்கிறோம்.
தென்காசி மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்படும். அதற்கான இடம் தருவதாக ஆட்சியர் ஒப்புதல் கொடுத்து உள்ளார். விரைவில் மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்படும். அதற்காக குழு பரிந்துரை செய்யும்.
மொத்தமாக 974 கோடி மதிப்பிலான மேற்குறிப்பிட்ட பணிகளை செய்வதற்குரிய பணிகளை ஆய்வு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்த தொகையை விரைந்து ஒதுக்கீடு செய்வதற்கு எந்த அளவிற்கு கமிட்டி உதவி செய்யுமோ செய்து அந்த பணத்தை பெற்று தரும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு துறையிலும் காலி பணியிடங்கள் மொத்தமாக 406 பணியிடங்கள் இந்த மாவட்டத்தில் காலியாக உள்ளது. இதனை விரைவாக நிரப்ப வேண்டும் என்று அறிக்கை சிலர் கொடுத்துள்ளனர். சிலர் கொடுக்கவில்லை, அதனையும் கொடுத்தால் சென்னையில் கமிட்டி கூடி முடிவெடுத்து பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கனிம வளங்கள் கடத்தப்படுவது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளையும் வைத்து கூட்டம் நடத்தி மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஒரு மாதத்திற்குள் அறிக்கை தயார் செய்து கொடுப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார். அது வந்தவுடன் சென்னையில் உள்ள துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கான வழிகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்றார்.
சிறுத்தைகள் ஊருக்குள் வருவது அதிகரித்து உள்ளது என்றால் அதன் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய சிக்கலான விஷயம். இதில் அரசுக்கு மிகப்பெரிய முயற்சி எடுத்தால் தான் முடியும், முதல்வரின் கவனத்திற்கு நிச்சயமாக கொண்டு செல்லப்படும். யானைகள், சிறுத்தைகள் போன்ற வன விலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்பாக தனிகவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார்,சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உட்பட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu