அய்யாபுரம் மாரியம்மன்கோவில் விழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
அய்யாபுரத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
அய்யாபுரம் கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 30 ம் ஆண்டு பூக்குழி திருவிழாவில் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி சிறப்பித்தனர்.
தென் மாவட்டங்களில் பல்வேறு கிராம தேவதைகளுக்கு சிறப்பு விழாக்களும்,கோவில் திருவிழாக்களும் வெகு விமரிசையாக நடைபெறும். குலதெய்வ வழிபாட்டை முன்னிறுத்தி நடைபெறும் விழாக்களுக்கு கிராமத்தில் இருந்து வேலைக்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் கிராமத்தைச் சார்ந்தவர்கள் திருவிழா சமயங்களில் தங்களது சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தோடு திருவிழாவை கண்டு களித்து மகிழ்ச்சியாக செல்வார்கள். தீபாவளி மற்றும் பொங்கலுக்கு கூட விடுமுறை எடுக்காமல் பணி புரியும் கிராம மக்கள் தங்களது சொந்தங்களை காண இது போன்ற திருவிழாவுக்கு வருவது வழக்கமாக கொண்டிருப்பது தென் மாவட்ட மக்களின் வாழ்க்கை முறை.
தென்காசி மாவட்டம் அய்யாபுரம் கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டு தோறும் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த வருடம் 30வது ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு கடந்த செவ்வாய்கிழமை காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கிய திருவிழாவானது 3ம் தேதி செவ்வாய்க்கிழமை முளைப்பாரி கும்மி பாட்டு ஊர்வலத்துடன் சிறப்பு அபிஷேக பூஜை, அன்னதானம், வில்லிசை கச்சேரி, பலவகை மேளதாளங்கள் முழங்க நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா இன்று நடைபெற்றது. அதிகாலை சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்தி கடனை நிறைவு செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இத்திருவிழாவிற்கு தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu