தென்காசியில் பிரபல உணவகத்தில் கியாஸ் கசிவினால் திடீர் தீ விபத்து

தென்காசியில் பிரபல உணவகத்தில் கியாஸ் கசிவினால்  திடீர் தீ விபத்து
X

உணவகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்தனர்.

தென்காசியில் பிரபல உணவகத்தில் கியாஸ் கசிவினால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தென்காசியில் பிரபல உணவுக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து செயல்பட்ட தீயணைப்புத் துறையினரால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் தென்காசி நகர் பகுதியில் தெப்பக்குளம் அருகே பிரபல இட்லி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. குற்றாலத்திற்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து உணவு அருந்துவது வழக்கம். அதேபோல் ஆன்மீக சுற்றுலா வரும் பக்தர்கள் இங்கு வந்து உணவு அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மாலை நேரத்தில் தயாராகும் இட்லி சுட சுட சாப்பிட ஏராளமான உள்ளூர்வாசிகளும் வருவது வாடிக்கையாக வைத்துள்ளனர். மாலை நேர உணவு கடை என்பதால் மாலை முதல் இரவு வரை அதிகமான கூட்டம் காணப்படும்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் கடையில் மாலை நேர உணவிற்காக கடைப் பணியாளர்கள் ஆயத்த பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எரிவாயு உருளையிலிருந்து எரிவாயு கசிந்துள்ளது. இதனை அறிந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக தீ பற்றியது. தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார், நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

வேகமாகவும், துரிதமாகவும் செயல்பட்ட தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் முழுவதுமாக தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினரும், தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகரில் மையப் பகுதியில் பெரும் விபத்தை தீயணைப்புத் துறையினர் திறமையாக செயல்பட்டு தவித்து இருப்பதை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags

Next Story