தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் இன்று வெளியிட்டார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் வெளியிட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பெற்றுக் கொண்டனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி, 01.01.2023 ஆம் நாளினைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, 2023-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டத்தில், உள்ள சங்கரன்கோவில்(தனி) தொகுதியில் 1,17,799, ஆண் வாக்காளர்களும், 1,24,478, பெண் வாக்காளர்களும், 7 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,42,284 வாக்காளர்களும் உள்ளனர்.
அதேபோல் வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் 1,15,839 ஆண் வாக்காளர்களும், 1,20,663, பெண் வாக்காளர்களும், 4 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,36,506 வாக்காளர்களும், கடையநல்லூர் தொகுதியில் 1,40,768 ஆண் வாக்காளர்களும், 1,43,279 பெண் வாக்காளர்களும், 4 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,84,059 வாக்காளர்களும் உள்ளனர்.
தென்காசி தொகுதியில் 1,41,892 ஆண் வாக்காளர்களும், 1,48,109 பெண் வாக்காளர்களும், 62 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,90,063 வாக்காளர்களும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் 1,26,078 ஆண் வாக்காளர்களும், 1,33,954 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,60,041 வாக்காளர்கள் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 6,42,376 ஆண் வாக்காளர்களும், 6,70,483 பெண் வாக்காளர்களும், 94 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 13,12, 953 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பதிவு செய்வதற்கு மற்றும் ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம்-6, இந்திய கடவுச்சீட்டு வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பதிவு செய்வதற்கு படிவம்-6A, ஏற்கனவே பதிவு செய்துள்ள பெயரினை நீக்கம் செய்வதற்கு அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் சேர்ப்பு குறித்து ஆட்சேபனை தெரிவிக்க படிவம்-7, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை மாற்றம் அல்லது திருத்தம் செய்வதற்கு, சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம்-8-இல் விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.
ஜனவரி1, 2023 அன்று அல்லது அதற்கு முன்பு 18 வயது பூர்த்தி அடைந்த வாக்குச்சாவடி பகுதியில் சாதாரணமாக வசித்து வரும் இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
09.11.2022 முதல் 09.12..2022 வரை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி மையங்கள் / வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து நேரடியாக அளிக்கலாம்.அல்லது www.NVSP.in என்ற இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம்.
கைப்பேசியில் வாக்காளர் (VHA) என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய நான்கு நாட்களில், வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவத்துடன் வயது மற்றும் முகவரிக்கான ஆதாரங்களை இணைக்க வேண்டும். மேலும் விவரம் மற்றும் தகவலுக்கு தொடர்பு கொள்ள 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம். பெறப்படும் விண்ணப்பப் படிவங்கள் மீது உரிய விசாரணைகள் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2023 அன்று வெளியிடப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி, வட்டாட்சியர் (தேர்தல்) கிருஷ்ணவேலன், நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களான சரவணன், ராமராஜ் (தி.மு.க), கசமுத்து , ராமச்சந்திரன் (அ.தி.மு.க) குத்தாலிங்கம் (பா.ஜ.க) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu