நூல் விலை உயர்வை குறைக்க தொழிலாளர்கள் கோரிக்கை

நூல் விலை உயர்வை குறைக்க தொழிலாளர்கள் கோரிக்கை
X

விசைத்தறி நூல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்காசி ஆட்சியரிடம் விசைத்தறி தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 4 ஆயிரம் விசைத்தறிகளை நம்பி சுமார் 20ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணத்தால் வாழ்வாதாரம் இழந்து தற்போது மீண்டு வரும் நிலையில் நூல்களின் விலை ஏற்றத்தால் மேலும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் 100க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

இது குறித்து விசைத்தறி தொழிலாளர்கள் கூறுகையில், நூல்கள் வெளிநாடுகளுக்கு பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால், கைத்தறிக்கு அடுத்தபடியாக உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் பயன்படுத்தும் நூலின் விலை பன்மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சேலை விலை ரூ.45 வரை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் தலையிட்டு நூல் ஏற்றுமதி செய்வதை தடுக்க வேண்டும், நெல் கரும்பு போன்றவைகளுக்கு அடிப்படை ஆதார விலை நிர்ணயம் செய்வது போன்று நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

நூல் விலை நிர்ணயம் செய்ய கட்டுப்பாடு குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறினர். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வார காலம் கவனஈர்ப்பு உற்பத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil