தென்காசி நாடாளுமன்ற தொகுதி: என்ன செய்தார் எம்.பி?

தென்காசி நாடாளுமன்ற தொகுதி: என்ன செய்தார் எம்.பி?
X

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சட்டசபை தொகுதிகள்

அடிப்படைத் தேவைகளுக்கான கோரிக்கைகள் கூட நிறைவேர்றவில்லை என தொகுதி மக்கள் கூறினாலும், பல நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும், தொகுதி நலனுக்கான நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளதாகவும் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்

சுற்றுலாப் பயணிகள் கொண்டாடும் குற்றால அருவிகளைக் கொண்ட தென்காசி தொகுதி விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் பெருமளவில் வாழும் பகுதி. இங்கு நெல், வாழை, கரும்பு, எலுமிச்சை உள்ளிட்டவைகளின் சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. சுற்றுலாத் தலம் மட்டும் அல்லாமல் குற்றால நாதர், காசி விஸ்வநாதர், சங்கரநாராயணர் கோயில், தோரண மலை முருகன் கோயில் என பல புகழ்பெற்ற ஆன்மிக தலங்களையும், அடவிநயினார் அணை, கடனா நதி அணை, குண்டாறு அணை, கருப்பா நதி ஆகிய நீர்த்தேக்கங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது தென்காசி நாடாளுமன்ற தொகுதி.

தொகுதி நிலவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 2019ஆம் ஆண்டு பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளையும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியது.

தமிழகத்தின் 37வது நாடாளுமன்றத் தொகுதியான தென்காசி, தென் பகுதியில் உள்ள ஒரே தனி தொகுதி ஆகும். தென்காசி தொகுதியில் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 7 லட்சத்து 42 ஆயிரத்து 158 பேர் ஆண்கள், 7 லட்சத்து 73 ஆயிரத்து 822 பேர் பெண்கள், 203 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

1957-இல் தொகுதி உருவாக்கப்பட்டது முதல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இந்த தொகுதி விளங்கி வந்துள்ளது. இந்த தொகுதியில் தொடர்ந்து 9 முறை காங்கிரஸ் கட்சியும், ஒருமுறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. அதற்கடுத்ததாக அதிமுக 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும், திமுக ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளது.

அருணாசலம் 1977ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்றுள்ளார். 5 முறை காங்கிரஸ் கட்சி சார்பிலும், கடைசியாக 1996ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.


தற்போது 17வது மக்களவையின் தென்காசி தொகுதி எம்பியாக திமுகவைச் சேர்ந்த தனுஷ் எம்.குமார் உள்ளார். தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தீவிர விசுவாசியாக அறியப்படும் தனுஷ் எம்.குமார் 2019ஆம் ஆண்டில் அவர் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்று எம்பியும் ஆனார். 4 லட்சத்து 76 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்ற தனுஷ் எம்.குமார் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை விட 1 லட்சத்து 20 ஆயிரத்து 286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தென்காசி தொகுதியைக் கைப்பற்றிய முதல் திமுக வேட்பாளர், முதல் தேர்தலில் வெற்றி பெற்றவர்

தேர்தலின் போது பூ விலை வீழ்ச்சியை சந்திக்கும் சமயங்களில் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் செண்ட்(வாசனை திரவியம்) தொழிற்சாலை அமைக்கப்படும். செண்பகவல்லி அணை பிரச்சினையைத் தீர்ப்பேன். மாம்பழம் அதிகம் பயிரிடப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் மாம்பழச்சாறு தயாரிக்கும் ஆலை அமைப்பேன். விவசாய விளைபொருட்களைப் பாதுகாக்கக் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தொகுதி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு அறிவேன். தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு வழிவகைகள் செய்து தருவேன் எனப் பல வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

ஆனால் தொகுதியின் எம்பி பல நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும், தொகுதி நலனுக்கான நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளதாகவும் ஆதரவு தெரிவிக்கின்றனர் சிலர்.

எம்பி செய்தது என்ன?

விருதுநகர் - தென்காசி - செங்கோட்டை மார்க்கத்தில் ரயில் வழித்தடம் ரூ.161 கோடி மதிப்பில் மின் மயமாக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் - செங்கோட்டை விரைவு வண்டி, எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ஆகியவை புதிதாக இயக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை - மயிலாடுதுறை, மதுரை - குருவாயூர், செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. மேலும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இவை எம்.பி., தனுஷ் எம்.குமாரின் சாதனைகளாகக் குறிப்பிடப்படுகிறது.

நிறைவேற்றத் தவறியவை:

பக்தர்களின் வசதிக்காக உருவானதாகக் கூறப்படும் தென்காசியில் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான கோரிக்கைகள் கூட நிறைவேறுவதேயில்லை என குமுறுகின்றனர் தொகுதி மக்கள்.

திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலை பணிக்காக ராஜபாளையம் முதல் வடகரை வரையிலான விவசாய நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகள் வைத்த கோரிக்கைக்குச் செவி சாய்க்காதது. குற்றாலத்தை மேம்படுத்தாதது, லெமன் சிட்டி என்ற பெயர் பெற்ற புளியங்குடியில் எலுமிச்சை சந்தை கொண்டு வராதது, செண்ட் ஆலை அமைக்காதது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

விவசாயிகள் நிறைந்த இந்த பகுதிக்கு எம்பி குறிப்பிடும் வகையில் எதுவும் செய்யவில்லை. தென்காசி மக்கள் கடந்த காலங்களில் வறட்சியாலும், சமீபத்தில் வெள்ளத்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டனர். வறட்சி, வெள்ள பாதிப்பின் போது எம்பி நேரடியாக வந்து விவசாயிகளைச் சந்தித்தது இல்லை.

களம் காணக் காத்திருப்பவர்கள்:

தென்காசி தொகுதியில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றிருந்தாலும் இம்முறையும் திமுகவே போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.

திமுக: சங்கரன்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி, சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ராணி ஸ்ரீ குமார், தற்போதைய எம்.பி., தனுஷ் எம்.குமார் உள்ளிட்டோர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் காங்கிரசும் தென்காசி தொகுதியைக் கைப்பற்ற வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதிமுக: முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, முன்னாள் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா ஆகியோர் சீட் பெறுவதில் முனைப்பு காட்டுவதாகக் கட்சியினர் கூறினாலும், ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

பாஜக: பாஜக ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பிரிவின் மாநில தலைவர் ஆனந்தன், மாநிலச் செயலாளர் பொன்.பாலகணபதி ஆகியோர் பெயர் வேட்பாளர் பரிசீலனையில் அடிபடுவதாகக் கூறப்படுகிறது. இருவரில், பொன்.பாலகணபதிக்கு வாய்ப்பு வழங்கப்படும்பட்சத்தில் ஆனந்தன் நீலகிரி தொகுதியில் களமிறக்கப்படலாம் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. ஏற்கனவே நீலகிரியில் களமிறங்குவார் என கருதப்பட்ட எல்.முருகன் ராஜ்யசபா பதவியைப் பெற்றதால் இந்த மாற்றம் நிகழலாம் என கூறப்படுகிறது.

நாம் தமிழர்: இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நிலையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மதிவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு 4வது இடம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதி இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் மதிவாணன் ஏற்கனவே பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story