சங்கரன்கோவிலில் அரசு பேருந்து ஓட்டுனர் மீது தாக்குதல் கண்டித்து போராட்டம்
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையத்தில் பேருந்து எடுக்கும் நேரத்தில் ஏற்பட்ட தகராறில் தனியார் பேருந்து ஓட்டுனர் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதால் சுமார் ஒரு மணி நேரம் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. இந்த சம்பவம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வருவதால் தற்காலிக பேருந்து நிலையம் திருவேங்கடம் சாலை மற்றும் கழுகுமலை இணைப்புச் சாலையில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று அரசு பேருந்து திருநெல்வேலி செல்வதற்கு 5. 15 மணிக்கு கிளம்பி உள்ளது. அதனைத் தொடர்ந்து தனியார் பேருந்து 5. 25 மணிக்கு கிளம்புவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. 5:15க்கு அரசு பேருந்தை எடுத்த ஓட்டுநர் செந்தட்டியாபுரத்தை சேர்ந்த குமார் என்பவர் பேருந்து எடுத்த நேரத்தில் ஒரு பயணி வந்ததால் அவரை ஏற்றுவதற்காக பேருந்தை நிறுத்தி உள்ளார்.
அப்பொழுது தனியார் பேருந்து ஓட்டுனர் பிள்ளையார் குளத்தைச் சேர்ந்த ராமர் என்பவர் அரசு பேருந்துக்கு முன்பாக அவரது பேருந்தை எடுத்து சென்று டைம் முடிந்தும் கிளம்பாமல் இருப்பதாக அரசு பேருந்து ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அரசு பேருந்து ஓட்டுனர் ஏற்கனவே இதய நோயாளி என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனியார் பேருந்து ஓட்டுனர் தாக்கியதால் அரசு பேருந்து ஓட்டுனர் குமார் கீழே விழுந்துள்ளார். அவரை அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அதனைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து பணியாளர்கள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மற்ற அரசு பேருந்துகளை எடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த சங்கரன்கோவில் பணிமனை கிளை மேலாளர் குமார், மற்றும் தொ.மு.ச. நிர்வாகிகள் ஆகியோர் சங்கரன்கோவில் நகர காவல் ஆய்வாளர் சண்முகவடிவு மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சந்தனராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து தனியார் பேருந்து ஓட்டுநர் ராமர் விசாரணைக்காக சங்கரன்கோவில் நகர காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து அரசு பேருந்து பணியாளர்கள் பேருந்துகளை மீண்டும் இயக்கத் தொடங்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இது குறித்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறிய போது தனியார் பேருந்துகள் இதுபோன்று நேரத்தை முழுமையாக பின்பற்றாமல் இவ்வாறு செய்வது தொடர்கதையாக உள்ளதாகவும், மேலும் தற்காலிக பேருந்து நிலையத்தில் பாதுகாப்பிற்காக அதிகப்படியான காவலர்களை ஈடுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu