சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல்: பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுப்பு
தேர்தல் நடைபெற்ற ஒன்றிய அலுவலக வளாகத்தில் கேட்டில் பத்திரிக்கையாளர்கள் / பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றத் தலைவர் தேர்தலையொட்டி செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை போலீசார் அலுவலக வளாகத்தில் கூட அனுமதிக்கவில்லை. இதனால் பத்திரிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செய்தி சேகரிக்க பத்திரிக்கையாளர்கள் சென்ற போது போலீசார் அனுமதி இல்லை என தெரிவித்தனர்.
அலுவலக வளாக கேட்டில் பத்திரிக்கையாளர்கள் / பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. அதை காண்பித்து போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் மேலநீலிதநல்லூர், குருவிகுளம் ஆகிய ஒன்றிய அலுவலகங்களில் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற ஒன்றிய உறுப்பினர்கள் பதவியேற்பின்போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக 2 திமுக உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சுமார் 2 மணிநேரம் கழித்து பதவி பிரமானம் செய்து வைத்தார். இது தொடர்பான செய்தி நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானது.
இந்நிலையில் தேர்தல் நடைபெற்ற ஒன்றிய அலுவலக வளாகத்தில் கூட பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்காததால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர். இது தொடர்பாக சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திராவிடம் கேட்டதற்கு தேர்தல் நடத்து அலுவலரான திட்ட இயக்குநர் உத்தரவின் பேரில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu