சல்யூட் அடிக்காத போலீஸை குதறி எடுத்த டாக்டர்: கோவில்பட்டி அக்கப்போர்

சல்யூட் அடிக்காத போலீஸை குதறி எடுத்த டாக்டர்: கோவில்பட்டி அக்கப்போர்
X
சல்யூட் அடிக்காததால், கைதிகள் பாதுகாப்புக்கு வந்த காவலர்களை சகட்டுமேனிக்கு எகிறிய கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்

கோவில்பட்டி சிறையில் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த சிலருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை அடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி சேர்க்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கிழக்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் வார்டுக்குள் வருகை தந்த அரசு மருத்துவர் வாசன் என்பவர் அங்கு சிறை கைதிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸை பார்த்து, நான் வந்ததும் என்னைப் பார்த்து சல்யூட் அடிக்க தோணலையா? டாக்டர் பெருசா. போலீஸ் பெருசா? பத்தாம் கிளாஸ் பெருசா, எம்பிபிஎஸ் பெருசா? என எகிறியுள்ளார்.

சார். நாங்க பட இடங்களில் டூட்டி பார்ப்பதால் ஞாபகத்துக்கு வரவில்லை என டாக்டரிடம் அந்த போலீஸ் சொல்ல, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தரக்குறைவான வார்த்தையில் பேசினாராம் அந்த மருத்துவர்.

அதற்கு அந்த காவலர், சார், நானும் எம்.காம் படிச்சிட்டு தான் போலீஸ் வேலைக்கு வந்திருக்கேன். போலீஸை ரொம்ப கேவலமா பேசாதீங்க. உயர் அதிகாரிகள் வந்தால் சல்யூட் அடிக்க தான் எங்களுக்கு ட்ரெய்னிங்கில் சொல்லி தந்துள்ளார்கள். நீங்கள் டாக்டர்ன்னு எனக்கு தெரியாது. உங்ககிட்ட இப்போது டாக்டர் அடையாள அட்டையும் பார்வையில் படும்படி இல்லை. ஒயிட் கோட்டும் போடவில்லை. ஸ்டெதெஸ்கோப்பும் கையில் இல்லை பிறகு எப்படி டாக்டர்னு தெரியும்? எங்க டி.எஸ்.பி., எஸ்.பி. சிவில் டிரஸ்ஸில் வந்தால் உங்களுக்கு எப்படி அடையாளம் தெரியும்? நீங்கள் அவர்களுக்கு சல்யூட் அடிப்பீங்களா. நீங்கள் ஒரு அரசு ஊழியர். நானும் ஒரு அரசு ஊழியர் என பதிலுக்கு எகிறியுள்ளார்.

இந்த விவகாரம் சில நிமிடங்களில் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்றதும் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலையிட்டு டூட்டியில் இருந்த போலீசை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தி உள்ளனர். அத்தோடு விவகாரம் முடிந்தது என கருதிய நிலையில். என்ன காரணமோ தெரியவில்லை. டாக்டரிடம் ஒரு பெட்டிஷனை வாங்கி, டூட்டி பார்த்த போலீஸ் மீது சி.எஸ்.ஆர். போட முயற்சித்து வருகின்றனராம் போலீஸ் உயர் அதிகாரிகள். இதனை அறிந்த சக போலீசார் மனம் குமுறி போயுள்ளனர்.

டாக்டர் என்ன கோபத்தில் இருந்தாரோ எளவு தெரியல? போலீசிடம் பொசுக்குன்னு எகிற, விவகாரம் முத்தி முச்சந்திக்கு வந்துவிட்டது. மற்ற தொழில்களை போல் அல்லாமல் டாக்டர் தொழில் உயிர் காக்கும் புனிதமான தொழில் தான். ஆனால் எல்லோரும் டாக்டர் ஆகிவிட்டால் 24 மணிநேரமும் மக்களைப் பாதுகாக்கிற போலீஸ் வேலையை யாரு பார்ப்பார்கள்?... ஒரு சல்யூட்க்காக அக்கப்போர் நிகழ்த்திய அந்த டாக்டருக்கு இது தெரியலையே என ஆதங்கப்படுகின்றனர் போலீஸ் பணியை சுவாசமாக நேசிக்கும் போலீஸார்.

பெயர், புகழ், வருமானம், பந்தா என எம்பிபிஎஸ் வட்டாரம் ஒரு பக்கம் வாழ்க்கை நடத்த, வீடு, மனைவி, குழந்தைகள், என அனைத்தையும் மறந்து ஆரோக்கியத்தையும் இழந்து, சமூகத்தில் அனிமல்ஸ் பெயரை அடைமொழியாய் வைத்திருக்கும் பலதரப்பட்ட சமூக விரோதிகளை எல்லாம் கடந்து டூட்டி பார்க்கிற போலீசுக்கு, போலீஸ் உயர்அதிகாரிகளே பாதுகாப்பாக இல்லாதது போலீசார் மத்தியில் அதிருப்தியும் அதிர்வலைகளையும் உண்டாக்கி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!