கிணற்றில் போடப்பட்ட அம்மன் சிலை: மீண்டும் பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபாடு

கிணற்றில் போடப்பட்ட அம்மன் சிலை: மீண்டும் பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபாடு
X

கிணற்றிலிருந்து எடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்மன் சிலை.

திசையன்விளை அருகே 12 வருடங்களுக்கு முன்பு கிணற்றில் போடப்பட்ட அம்மன் சிலையை மீண்டும் கோவிலில் வைத்து மக்கள் வழிபாடு செய்தனர்.

தென்காசி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள குட்டம் கிராமத்தில், சுமார் 300 வருடம் பழமை வாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் உள்ள பழமை வாய்ந்த ஆதின மூலவர் ஆனந்தவல்லி அம்மன் சிலை இருந்து வந்தது.

இக்கோவிலில் 2010ம் ஆண்டு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடந்த சமயத்தில் வழிபாட்டிலிருந்த அமர்ந்த நிலையிலான அம்மன் சிலையை அருகில் இருந்த கிணற்றில் போட்டனர். அதன்பின் நின்ற வடிவிலான புதிய அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அந்த அம்மன் சிலை தனி நபரால் சேதமடைந்தது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி 12 வருடங்களுக்கு முன்னர் கிணற்றில் போடப்பட்ட பழைய ஆதின சிலையை மீண்டும் வைப்பதற்கு முடிவு செய்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் அபிஷேக கிணற்றிலிருந்த ஆனந்தவல்லி அம்மன் சிலையை எடுத்து அதற்கு எண்ணை அபிஷேகம் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் பிரசன்னம் பார்த்து முன்னோர்களால் பல்லாயிரம் வருடம் வழிபட்டு வந்த உட்கார்ந்த நிலையில் உள்ள ஆனந்தவல்லி அம்மன் சிலையை முறைப்படி பிரதிஷ்டை செய்து அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து குட்டம் கிராம மக்கள் வழிபட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!