சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவசாயி கஜேந்திரன்.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட விரோத மின்வேலி
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வன விலங்குகள் வெளியேறி அவ்வப்போது உயிரினங்களை சேதப்படுத்துவது, பயிர்களை நாசப்படுத்துவது தொடர்கதை ஆகிவிட்டது. வனவிலங்குகளை வரவிடாமல் தடுப்பதற்காக சில விவசாயிகள் அவ்வப்போது சட்ட விரோதமாக மின் வேலி அமைப்பதும், அதில் சில விவசாயிகள் சிக்கி உயிரிழப்பதும் வாடிக்கையாகி வருகிறது. அப்படி ஒரு நிகழ்வு தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே நடைபெற்று உள்ளது.
இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
விவசாயி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது42 ) விவசாயி. இவர் இன்று அதிகாலை 5 மணி அளவில் கீழக்கலங்கல் ஊருக்கு வெளிப்புறம் உள்ள அவரது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். காலை 9 மணி ஆகியும் வீடு திரும்பாததால் அவரை தேடி அவரது மனைவி இளங்காமணி தோட்டத்திற்கு வந்தார். அப்போது பக்கத்து விவசாய தோட்டம் வைத்திருக்கும் நவநீதகிருஷ்ணபுரம் பெருமாள் என்பவரது தோட்டத்தில் காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துவதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் தண்ணீர் பாய்ச்சும் போது மண்வெட்டி பட்டு உரசியதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் கஜேந்திரன் இறந்து கிடந்தது தெரியவந்தது.
போராட்டம்
இது குறித்து ஊத்துமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். விவசாயி மின்வேலியில் அடிபட்டு இறந்த தகவல் அறிந்த பொதுமக்கள் உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு காரணமான சட்ட விரோதமாக மின்வேலி அமைத்தவரை கைது செய்ய வேண்டும், இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் மற்றும் வீட்டில் உள்ளவருக்கு அரசு வேலை போன்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு தென்காசி கோட்டாட்சியர் கங்கா தேவி, ஆலங்குளம் டி. எஸ்.பி சகாய ஜோஸ், தென்காசி எம்.எல்.ஏ பழனிநாடார் ஆகியோர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதிகாரிகள் வாக்குறுதி
இறந்தவரின் குடும்பத்தினருக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கவும், அவர்கள் குடும்பத்தில் அவருக்கு அரசு வேலை சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலந்து சென்றனர். அதன் பின்னர் போலீசார் விவசாயி கஜேந்திரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சட்டவிரோதமாக மின் வேலி அமைத்த பெருமாள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu