கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பிர்காவை தென்காசி மாவட்டத்துடன் இணைக்க எதிர்ப்பு

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பிர்காவை தென்காசி மாவட்டத்துடன் இணைக்க எதிர்ப்பு
X

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பிர்காவை தென்காசி மாவட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி திமுக அமைச்சர் கீதாஜீவன் அளித்துள்ள மனுவை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தலையில் முக்காடு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக அமைச்சர் கீதாஜீவன் அளித்துள்ள மனுவை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தலையில் முக்காடு போட்டு போராட்டம்

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பிர்காவை தென்காசி மாவட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி திமுக அமைச்சர் கீதாஜீவன் அளித்துள்ள மனுவை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தலையில் முக்காடு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பிர்கா திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் இருந்து வந்தது. ஆனால், சட்டப்பேரவை தொகுதி கோவில்பட்டியிலும், நாடாளுமன்ற தொகுதி சிவகாசியிலும் இருந்தது. தங்கள் பிர்காவை கோவில்பட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இளையரசனேந்தல் பிர்கா கோவில்பட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்கப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 15.4.2008-ல் அரசாணை வெளியிடப்பட்டு, அதே ஆண்டு மே 1-ம் தேதி இளையரசனேந்தலில் இணைப்பு விழா நடந்தது. மற்ற துறைகள் அனைத்தும் கோவில்பட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட நிலையில், தொடக்க கல்வித்துறை, மின்வாரியம், உள்ளாட்சித்துறை ஆகியவை மட்டும் இணைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு இறுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இளையரசனேந்தல் பிர்காவுடன் இணைக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி, தென்காசி நாடாளுமன்ற தொகுதி மற்றும் குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக கோவில்பட்டி அருகே பழைய அப்பநேரி கிராமத்தில் கிராம மக்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமை வகித்தார். இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உரிமை மீட்பு குழு தலைவர் கோபாலகிருஷ்ணன், துணை தலைவர் கற்பூரராஜ், வாழப்பாடி பேரவை மாநில செயலாளர் வழக்கறிஞர் அய்யலுசாமி, தேசிய விவசாயிகள் சங்க மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவர் ராகுல், ஒன்றிய தலைவர் ஜெயக்குமார் மற்றும் பல்வேறு ஊர் நாட்டாமைகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 ஊராட்சிகள் கோவில்பட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர வேண்டும். 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்துக்கு வழங்கிய மனுவை ரத்து செய்து, இளையரசனேந்தல் பிர்கா மக்களின் கோரிக்கை ஏற்று, வருகிற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் தீர்மானம் நிறைவேற்றி, இணைக்கப்படாத உள்ளாட்சி, தொடக்க கல்வி, மின்சாரத் துறையை கோவில்பட்டி வட்டத்துடன் இணைக்க வேண்டும்.

எங்கள் தீர்மானத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் மக்களை திரட்டி சாலை மறியல், உண்ணாவிரதம், மக்கள் உரிமை ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதுகுறித்து தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு கூறும்போது, கோவில்பட்டி வளர்ச்சிக்கு விரோதமாக செயல்படும் அமைச்சர் கீதாஜீவன் தனது மாற்றாந்தாய் மனநிலையை கைவிட்டு கோவில்பட்டி வளர்ச்சிக்கு உதவ வேண்டும். இன்றிலிருந்து 12 வருவாய் கிராமங்களின் உரிமை "எங்க கோவில்பட்டி, எங்க வளர்ச்சி" என்ற கோஷம் முழக்கம் செய்ய உள்ளோம் என்றார் அவர்.

இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டியில் இணைப்பதற்காக தொடக்கத்தில் இருந்து வழக்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்த முன்னாள் ராணுவ வீரரும், சமூக ஆர்வலருமான அ.ஜெயபிரகாஷ் நாராயணசாமி கூறுகையில், கடந்த 2014-ம் அப்போதைய கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில், திருவேங்கடம் வட்டத்துடன் இளையரசனேந்தல் பிர்காவை இணைப்பு தொடர்பான விரிவான அறிக்கை கேட்டிருந்தார்.

அதன்படி 19.8.2014-ல் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தின் முடிவின்படி, இளையரசனேந்தல் பிர்காவை திருவேங்கடம் வட்டத்துடன் இணைப்பதால் நிர்வாக காலதாமதம் ஏற்படும் என்பதாலும், இளையரசனேந்தல் பிர்கா தொடர்ந்து கோவில்பட்டி கோட்டத்துடன் செயல்படலாம் என்று அப்போதை வட்டாட்சியர் அறிக்கை சமர்பித்துள்ளார், எனவே, இளையரசனேந்தல் பிர்கா கோவில்பட்டி வட்டத்தில் செயல்படலாம் என அப்போதைய சார் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அறிக்கை சமர்பித்தார். அத்துடன் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 வருவாய் கிராம மக்களின் உணர்வுகளையும், பிரச்னைகளையும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் நன்றாக அறிந்தும் வேடிக்கை பார்த்தது தான் இந்த நிலைக்கு பொதுமக்கள் ஆளாகி உள்ளனர். இனிமேலாவது மாவட்ட ஆட்சியர்கள் தவறான தகவல்களை அளிக்காமல், பொதுமக்களின் மனநிலையை அறிந்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும். இளையரச னேந்தல் பிர்காவில் உள்ள அனைத்து அரசுத்துறைகளையும் கோவில்பட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்றார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!