பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் இருக்க முதல்வர் தான் காரணம் : அமைச்சர் ராஜலட்சுமி

பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் இருக்க முதல்வர் தான் காரணம் : அமைச்சர் ராஜலட்சுமி
X

கண்பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்றால் அதற்கு காரணம் தமிழக முதல்வர் தான் என அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெள்ளாளன்குளம் மற்றும் கடம்பன்குளம் ஊராட்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை மூலம் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கினை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி இன்று திறந்து வைத்து தெரிவித்ததாவது:- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடிமராமத்து திட்டத்தை தொடங்கி வைத்து கடந்த 2 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் அனைத்து ஏரிகளும், வரத்துக்கால்வாய்களும், குளங்களும் தூர்வாரப்பட்டு முழுமையாக சீர்செய்யப்பட்டு இன்று கண்பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்றால் அதற்கு காரணம் தமிழக முதல்வர்.

நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கித் தரவேண்டும், அதுவும் குறிப்பாக ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மக்களுக்கு நோய் ஏற்படுகின்ற போது தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையிருக்கின்றது. அந்த சுமை கூட இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் அம்மாவின் அரசு, குறிப்பாக ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பகுதியிலேயே அம்மா மினி கிளினிக்குகளை உருவாக்கி, அப்பகுதி மக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை அரசு தொடர்ந்து வழங்கும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கலுசிவலிங்கம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகளின் நேர்முக உதவியாளர் ரகுபதி, நெசவாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆறுமுகம், பேரங்காடி துணைத்தலைவர் வேல்சாமி, சுகாதார அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!