தென்காசியில் மத்திய அரசை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்

தென்காசியில் மத்திய அரசை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்தும், சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பத்து ஆண்டு காலம் பா.ஜ.க., அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகின்றது, 18-ஆவது மக்களவைத் தேர்தல் முடிந்து, தனிப் பெரும்பான்மை பலத்தை இழந்த பாஜ.க, கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. எனவே, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள மத்திய பா.ஜ.க., அரசு, கடந்த ஜூலை 23-ஆம் நாள் தாக்கல் செய்த 2024-25 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் பீகார், ஆந்திர மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்கி உள்ளது.

ஆனால், தமிழ்நாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு 37 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் வைத்த கோரிக்கையை நிராகரித்த மத்திய பா.ஜ.க., அரசு வெறும் 276 கோடி ரூபாய் மட்டுமே அளித்திருக்கிறது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்தும், சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டங்களின் தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதிமுக பொதுக்குழு தீர்மானத்தின் படியும் தலைவர் வைகோ ஆணைப்படியும், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வழிகாட்டுதலிலும் மத்திய அரசை கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர சதன் திருமலைக் குமார் தலைமை தாங்கினார்.

தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம உதயசூரியன் தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக தலைமை தணிக்கை குழு உறுப்பினர் சுரண்டை இராமகிருஸ்ணன், அவைத்தலைவர் வெங்க டேஸ்வரன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சுப்பையா, உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு