குடிநீர் பிரச்சனையால் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு

குடிநீர் பிரச்சனையால் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு
X

குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

புளியரை ஊராட்சியில் குடிநீர் பிரச்சனையால் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட புளியரை ஊராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு மற்றும் 12 வது வார்டு பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை அதிக அளவில் காணப்படுவதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு 11வது வார்டு பகுதியை சேர்ந்த கவுன்சிலரான முத்துமாரி என்பவர் புளியறை பகுதியில் உள்ள திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதனை தொடர்ந்து, அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அந்தப் போராட்டம் கைவிடப்பட்ட சூழலில், 11-வது மற்றும் 12வது வார்டு பகுதியில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று தண்ணீர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டம் செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வைத்து, பதினோராவது வார்டு மற்றும் பன்னிரண்டாவது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்களைை வைத்து நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது பதினொன்னாவது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும், 12வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வாக்குவாதம் முற்றவே 12வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளியேறி தாலுகா அலுவலகம் முன்பு இருந்த சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கை குழந்தைகளுடன் ஏராளமான பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், தகவல் அறிந்து விரைந்து வந்த தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தார்.

இருந்தபோதும், எங்களது குடிநீர் பற்றாக்குறை தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சாலையின் ஓரமாக நின்று பன்னிரண்டாவது வார்டு பொதுமக்கள் பிரச்சனையில் ஈடுபட்ட சூழலில் தென்காசி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் விரைந்து வந்து தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பொதுமக்களை சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!