மாணவர்களுக்கு பஸ் வசதி கேட்டு விந்தன்கோட்டை பகுதி சபை கூட்டத்தில் மனு..
விந்தன்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் பங்கேற்றோர்.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்களும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நகர பகுதி சபை கூட்டங்களும் இன்று நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அந்தந்த பகுதி மக்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என அரசு அறிவித்திருந்தது.
மேலும், அனைத்து பகுதிகளிலும் மக்கள் தங்கள் குறைகள், மேலும் தேவையான அடிப்படை வசதிகள், உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக சாம்பவர்வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு விந்தன்கோட்டையில் பகுதி சபை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, சாம்பவர்வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலெட்சுமி முத்து தலைமை தாங்கினார்.
பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நாலாயிரம் என்ற பாப்பா, செயல் அலுவலர் காயத்ரி, வார்டு கவுன்சிலரும் சபா தலைவருமான ராமலெட்சுமி, வார்டு செயலாளர் சந்திரசேகர், பேச்சியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி சபை கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
குறிப்பாக, தங்கள் கிராமத்திற்கு தாமிரபரணி குடிநீர் வேண்டும் எனவும், தினமும் பள்ளி மாணவர்கள் வசதிக்காக விந்தன்கோட்டை வழியாக சாம்பவர்வடகரைக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ் இயக்க வேண்டும் எனவும், மேலும் அடிப்படை வசதிகளான வருகால் வசதி, சாலை வசதி வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை மனுவை பேரூராட்சி தலைவி சீதாலெட்சுமி முத்துவிடம் வழங்கினர்.
அதைத் தொடர்ந்து பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து பேசியதாவது:
பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காகவே பகுதி சபை கூட்டத்தை நடத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் அந்தந்த துறை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
கூட்டத்தில், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பழனிக்குமார், சுடலைமுத்து, முத்துலெட்சுமி ராஜேந்திரன், அய்யப்பன், ரபீக்ராஜா,கிராம நிர்வாக அலுவலர் மாசனம், பேரூராட்சி பொறியாளர் கோபி மூகமது நதிகர் மற்றும் பேரூர் கழக செயலாளர் முத்து, சாமிதேவர், பட்டுமுத்து, முத்துக்குமார், செய்யதுஅபு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளில் பகுதி சபை கூட்டங்களும், கிராம ஊராட்சி மன்றங்களில் கிராம சபை கூட்டங்களும் நடைபெற்றன. வரும் காலங்களில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை மற்றும் பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu