சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது- சாலை மறியல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது- சாலை மறியல்
X

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மாணிக்கம்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து சாலை மறியல் நடந்தது.

கடையநல்லூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 20 வயது வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வழக்கு கொடுத்த சிறுமியின் உறவினர்களை, தாக்க வந்தவர்களை கண்டித்து நடந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள ஊர்மேலழிகியான் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் மாணிக்கம் (வயது 20). இவர், அவர் வசித்து வரும் பகுதியில் உள்ள 9 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாணிக்கத்தை பிடித்து, அடித்து உதைத்துள்ளனர்.

உடனே, இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாம்பவர் வடகரை போலீசார் மாணிக்கத்தை பொதுமக்களிடம் இருந்து மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் போது, மாணிக்கம் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்தது உறுதியானதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தென்காசி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணிக்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல் செய்தவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில், மாணிக்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாணிக்கத்தின் உறவினர்கள் சிறுமியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மாணிக்கத்தின் உறவினர்கள், சிறுமியின் உறவினர்களை தாக்க வந்த சம்பவத்தை கண்டித்து ஊர்மேலழகியான் பகுதியில் சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story