அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஒன்றிய தலைவி தலைமையில் ஆர்ப்பாட்டம்..!
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புசெங்கோட்டை யூனியன் தலைவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
செங்கோட்டை யூனியன் திமுக தலைவி பட்டியல் இனம் என்பதால் இவரை ஒதுக்கி வைப்பதாகக் கூறி பி.டி.ஓ. உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியரிடம் யூனியன் தலைவி மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட புளியரை, கற்குடி உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மக்களை சென்றடையாத வகையில் உள்ளதாகவும், சாலை வசதிகள், பொதுக் கட்டிட வசதிகள் உள்ளிட்டவைகள் தரம் குறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் கூறி அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய திமுக தலைவியான திருமலைச் செல்வியிடம் சென்று புகார் கொடுத்துள்ளனர்.
இதற்கு திமுக ஊராட்சி ஒன்றிய தலைவியான திருமலைச்செல்வி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தனக்கே மரியாதை இல்லை எனவும், டெண்டர் உள்ளிட்டவைகள் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவது இல்லை எனவும் தான் எது செய்தாலும் அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடையூறு ஏற்படுத்தி நான் பட்டியல் இனத்தை சார்ந்தவர் என்பதை காரணம் காட்டி தன்னை ஒதுக்குகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் செங்கோட்டை ஒன்றிய சேர்மன் திருமலைச்செல்வி ஆகியோர் ஒன்றிணைந்து நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 100 க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் திரண்டு வந்த திமுக யூனியன் சேர்மன் திருமலைச் செல்வி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் கோரிக்கை மனுவை சேர்மன் திருமலைச் செல்வி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சேர்மன் திருமலைச் செல்வி பேட்டியின் போது கூறியதாவது:-
நான் செங்கோட்டை யூனியன் சேர்மனாக பதவி வகித்து வருகிறேன். எனக்கென்று தனியாக கார் வசதி எதுவும் கிடையாது. தினந்தோறும் ஆட்டோவில் தான் அலுவலகத்திற்கு சென்று வருகிறேன். நான் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் என்பதால் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட ஊழியர்கள் தன்னை ஓரம் கட்டுவதாகவும் அலுவலகம் மூலம் நடைபெறும் டென்டரில் தன்னிடம் எந்த விதமான கலந்தாலோசனை செய்யாமலும் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் கூறியதுடன் தன்னை பட்டியலினத்தை சேர்ந்த பெண் என்று ஓரங்கட்டும் அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு பேர் மீது வன்கொடுமைத் திட்டத்தின் கீழ் கைது செய்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் நான் எனது யூனியன் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu