உக்ரைனில் சிக்கித் தவிக்கும் கடையநல்லூர் மாணவர்களை மீட்க பெற்றோர் கோரிக்கை
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தது. அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் இன்று 3-வது நாளாகவும் நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இது போன்று தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் அங்கு சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பேட்டை பகுதியை சேர்ந்த 3 மாணவர்கள் உக்ரைனில் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
கடையநல்லூர் பேட்டை காதர் முகையதீன் குத்பா பள்ளிவாசல் தெருவில் குடியிருக்கும் ஹமீது பாதுஷா என்பவரது மகன் சாகுல்கமீது மேற்கு உக்ரைனில் கார்கிவ் தேசிய மருத்துவக்கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வருகிறார்.
அவர் அங்கு நடந்து வரும் போர் காரணமாக வெளியேற முடியாமல் சிக்கி உள்ளார். அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு அருகிலேயே குண்டு மழை பொழிவதை வீடியோவாக பதிவு செய்து கடையநல்லூர் உள்ள பெற்றோருக்கு அனுப்பி வருகிறார். அதே பகுதி ரைஸ்மில் தெருவைச் சேர்ந்த சேக்உதூமான் மகன் அனஸ் இவர் இறுதி ஆண்டு மாணவன் ஆவார். மேலும் நத்கர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த செரீப் மகன் ஆசாத் என்பவரும் சிக்கி உள்ளார்.
தற்போது கீவ் நகரை கைப்பற்ற ரஷிய படைகள் உள்ளே புகுந்துள்ளன. இதனால் அங்கு கடுமையான போர் நடந்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வெளியேற முடியாமல் அங்கேயே சிக்கி தவித்து வருகின்றனர்.
இது போன்று புளியங்குடி வலையர் 6-வது தெருவில் குடியிருக்கும் கோதரி மகன் அப்துல்லாவும் சிக்கி தவித்து வருகிறார்.
இதுபோன்று கடையநல்லூரில் பத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அங்கே சிக்கித் தவிப்பதாக தெரிகிறது. தற்போது மெட்ரோ சுரங்கப் பாதையின் தங்க வைத்து இருப்பதாக வாட்ஸ்அப் மூலம் மற்றும் வீடியோ கால் மூலம் வீடியோக்களை பெற்றோர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்த மாணவர்களும் தாயகம் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு எங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu