புதிய பஞ்சாயத்து அலுவலகம் கட்ட எதிர்ப்பு: பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு
போகநல்லூரில் கிராம பஞ்சாயத்து புதிய அலுவலக கட்டிடத்தை கட்ட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கடையநல்லூர் தாலுகா போகநல்லூர் கிராம பஞ்சாயத்து புதிய அலுவலகத்திற்கான கட்டிடத்தை சங்கனாப்பேரியிலிருந்து மாற்றி போகநல்லூரில் கட்ட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கடையநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்டது போகநல்லூர் ஊராட்சி. இந்த ஊராட்சி ராமேஷ்வரம், சுந்தரேசபுரம், மீனாட்சிபுரம், சங்கனாப்பேரி, சிதம்பராப்பேரி, போகநல்லூர் உட்பட பல கிராமங்களை உள்ளடக்கி போகநல்லூர் கிராம பஞ்சாயத்து என பஞ்சாயத்து ராஜ் சட்டம் உருவானதில் இருந்து அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கான பஞ்சாயத்து அலுவலகம் போகநல்லூரில் அல்லாமல் சங்கனாப்பேரியில் தான் இதுவரை இருந்து வருகிறது. இந்த சூழலில் காலப்போக்கில் போகநல்லூரில் அதிக மக்கள் குடியேறி தற்போது சுமார் 3000 பேர் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் தற்போது போகநல்லூர் பஞ்சாயத்து அலுவலகம் அமைந்திருக்கும் சங்கனாப்பேரியில் சுமார் 140 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. போகநல்லூருக்கும் சங்கனாப்பேரிக்கும் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனால் போகநல்லூர் பொது மக்கள் அரசு திட்டங்களின் மூலம் பயன் பெறவும், அரசு சான்றிதழ்கள் பெறவும் சாலை போக்குவரத்து இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் போகநல்லூரில்தான் அரசு அலுவலகங்களான புகை வண்டி நிலையம், அரசு பொது விநியோக கடை, வாக்குச் சாவடி போன்றவைகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போகநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கு சங்கனாப்பேரியில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. எனவே தற்போது போகநல்லூர் மக்களிடையே நிலவி வரும் கஷ்டங்களை போக்குவதற்கு போகநல்லூர் பஞ்சாயத்து புதிய அலுவலகத்தை சங்கனாப்பேரியில் கட்டுவதை மாற்றம் செய்து போகநல்லூரிலேயே புதிய இடம் தேர்வு செய்து போகநல்லூர் பஞ்சாயத்து புதிய அலுவலகத்தை போகநல்லூரிலேயே கட்டி தந்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க உத்தரவு வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu