நிபா வைரஸ் எதிரொலி: தமிழக கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

நிபா வைரஸ் எதிரொலி: தமிழக கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
X
கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் எதிரொலி காரணமாக தமிழக கேரளா எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழக-கேரளா எல்லையில் தீவிர படுத்தப்பட்டுள்ள சோதனை - கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிய வகை பழங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தம்.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மத்திய சுகாதார துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு நிபா வைரஸ் தொற்றானது மேலும் பரவாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தி வருகின்றனர்.

மேலும், அண்டை மாநிலங்களில் உள்ள சோதனை சாவடிகளில் அந்தந்த மாநில அரசுகள் சோதனையை தீவிரப்படுத்தி வரும் நிலையில், தென்காசி மாவட்டம் தமிழக- கேரளா எல்லை பகுதியான புளியரை பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் சோதனை சாவடி மையம் ஒன்று அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் நபர்களும் முழுமையான சோதனைக்கு உட்பட்ட பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், குற்றாலத்திற்கு அதிக அளவில் சீசன் காலகட்டம் என்பதால் தற்போது அரிய வகை பழங்களான ரம்டான், மங்குஸ்தான் உள்ளிட்ட பழங்களின் சீசன் காலகட்டம் என்பதால் கேரளாவில் இருந்து ஏராளமான வாகனங்களில் கொண்டுவரப்படுகிறது.

இந்நிலையில், வெளவால்கள் மூலம் இந்த நிபா வைரஸ் தொற்றானது பரவக்கூடும் என்பதால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் கொண்டுவரப்படும் அரிய வகை பழங்கள் அனைத்தையும் சுகாதாரத் துறையினர் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே எல்லைப் பகுதிக்குள் அனுமதித்து வருகின்றனர்.

மேலும், வெளவால்கள் கடித்து சேதம் அடைந்த பழங்கள் ஏதேனும் இருந்தால் அந்த வாகனத்தை சுகாதாரத் துறையினர் திருப்பி அனுப்பி வைத்து வரும் நிலையில், நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் சுகாதாரப் பணியாளர்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!