வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மீது கோபம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மீது கோபம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.
X

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மீது கோபம் உள்ளது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை கூறினார்.

சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு பகுதியில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் 2 நாள் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று தங்களது கட்சி எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க நிர்வாகிகள், தொண்டர்களும் செய்ய வேண்டிய கட்சி பணிகள் குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.

கருத்தரங்கத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தலைவருமான செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.கருத்தரங்க கூட்டத்தின் முடிவிற்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த வரலாறு காணாத கன மழையின் காரணமாக சென்னையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் பல்வேறு பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனால் அவர்கள் தற்போது மிகுந்த வருத்தத்திலும், கோபத்தில் உள்ளனர். ஏனெனில் அவர்களின் இழப்பு என்பது பேரிழப்பாக உள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் செய்யப்பட்ட வடிகால் திட்டப்பணிகள் மூலமாக தான் தற்போது வெள்ளநீர் முழுவதுமாக வடிந்துள்ளது. சென்னையில் மழை வெள்ளத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது ஏரிகள் மற்றும் குளங்களில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகள் தான். மேலும் அனுமதி கொடுத்த அதிகாரிகள் அந்த மக்களுக்கு தேவையான வடிகால் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காததால் தான் இது போன்ற பெரு வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கித் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அதனால், இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் இது போன்ற பெரு வெள்ளம் இனிமேல் ஏற்படாத வண்ணம் தடுக்க செம்பரம்பாக்கம் தண்ணீரை சென்னை வழியாக கடலுக்கு கொண்டு செல்வதை தடுத்து பாலாற்றில் திருப்பி விட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு வெளிநாட்டு தொழில் நுட்ப வல்லுநர்களை அழைத்து வந்துதொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தி மழை நீர் மற்றும் செம்பரம்பாக்கம் நீரை பாலாறு பகுதிக்கு கொண்டு சென்று வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து, அந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், தற்போது வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு அதிகளவு பணம் தேவைப்படுவது உண்மை தான். ஏனெனில் அவர்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளனர். இருந்தபோதும், தற்போது தமிழக அரசிடம் உள்ள நிதி நிலைமையில் முதல்வர் ரூ.6000 கொடுக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது பாராட்டத்தக்கது. மக்கள் தற்போது இந்த மழை பாதிப்பால் மிகுந்த கோபத்தில் இருப்பது உண்மை என்றாலும், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story