செங்கோட்டை நகராட்சியில் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மோதல்

செங்கோட்டை நகராட்சியில் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மோதல்
X

செங்கோட்டை நகராட்சியில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டபோது எடுத்த படம்.

செங்கோட்டை நகராட்சி தலைவியும், அதிமுக கவுன்சிலரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 24 வார்டு கவுன்சிலர்கள் உள்ள சூழலில், இன்று நகர திட்டக்குழு கூட்டமானது நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு, இன்று நகராட்சி கூட்டரங்கில் நகர திட்டக்குழு கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தின் ஆரம்பம் முதலே கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் வார்டு பகுதியில் கடந்த 3 மாதங்களாக எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை எனவும், இது குறித்து அதிகாரிகளிடமோ நகராட்சி தலைவியிடமோ புகார் கொடுத்தால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முன் வருவதில்லை எனக்கூறி பிரச்சனையில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, பிரச்சனை பெரிதாகவே நகராட்சித் தலைவர் திட்டக்குழு கூட்டத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.

தொடர்ந்து, கூட்டம் நடைபெற்ற சூழலில், நகராட்சி கூட்டமானது கடந்த மாதமும், இந்த மாதமும் நடைபெறவில்லை இப்படி இருந்தால் மக்களின் குறைகளை எப்படி எடுத்து கூறி மக்களுக்கு நல்லது செய்வது என்று கூறி அதிமுக, மற்றும் பாஜக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நகர்மன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும், தற்போது செங்கோட்டை நகர மன்ற தலைவியாக உள்ள ராமலட்சுமி என்பவர் சுயேட்சையாக வெற்றி பெற்று முதலில் அதிமுக மற்றும் பாஜகவினர் ஆதரவுடன் சேர்மனாக பதவியேற்றார். பின்னர்கடந்த மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். அந்த சம்பவம் செங்கோட்டை நகர பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது முதல் இதுவரை நகர்மன்ற கூட்டம் நடத்தவில்லை என கூறப்படுகிறது.

மேலும் மெஜாரிட்டி இல்லாத ஒரு தலைவர் தற்போது உள்ளார் என கூறி அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டு கூட்டத்தை புறக்கணிப்பு வெளியேறினர்.

தொடர்ந்து, நகர மன்ற தலைவியின் அறைக்குள் சென்று அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பிரச்சனையில் ஈடுபட்ட நிலையில், அதிமுக 3-வது வார்டு கவுன்சிலரான சுடர்ஒளி என்பவரை தகாத வார்த்தையில் சேர்மன் பேசியதாக கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து, சேர்மன் மற்றும் 3-வது வார்டு கவுன்சிலர் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செங்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil