செங்கோட்டை நகர மன்ற கூட்டத்தில் மோதல்: நகர் மன்ற தலைவர் வெளியேறவிடாமல் சிறைபிடிப்பு

செங்கோட்டை நகர் மன்ற கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நகர் மன்ற உறுப்பினர்கள்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 வார்டு கவுன்சிலர்கள் உள்ள சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கோட்டை நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தின் போது, ஏற்பட்ட பிரச்சனையில் கவுன்சிலர்களும், நகர்மன்ற தலைவியும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, அது தொடர்பான காட்சிகளும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து, இரு தரப்பினர் மீது செங்கோட்டை காவல் நிலையத்தில் மாறி மாறி ஒருவரை ஒருவர் புகார் அளித்த நிலையில், இரு தரப்பினர் மீதும் செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் போது, 5 தீர்மானங்கள் மன்ற பொருளாக வைக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்து கேட்காமலே 5 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக திமுக கவுன்சிலரான பேபி ரஷப்பாத்திமா என்பவர் கூற தொடர்ந்து, ஆவேசம் அடைந்த கவுன்சிலர்கள் மக்கள் நலப் பிரச்சினைகளை நிறைவேற்றுவது விட்டு விட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுவது கண்டனத்திற்குரியது என பிரச்சனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கூட்டத்தின் போது, திமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் அல்லாத ஒரு நபர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் பிரச்சினையில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து, திமுகவை சேர்ந்த அந்த நபரை போலீசார் கூட்டரங்கில் இருந்து வெளியேற்றிய நிலையில், தங்கள் வார்டு பகுதியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கூறி கவுன்சிலர்கள் பிரச்சினையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, நகராட்சி தலைவியான ராமலட்சுமி கூட்டரங்கில் இருந்து வெளியே செல்ல முயற்சி செய்யவே, கவுன்சிலர்கள் மக்கள் குறைகளை தீர்த்து வைக்காமல் வெளியே செல்ல கூடாது எனக் கூறி கதவைப் பூட்டினர்.
அதனை தொடர்ந்து, பின்பக்க கதவை திறந்து நகராட்சி தலைவி கூட்ட அரங்கில் இருந்து வெளியேறிய நிலையில், அனுமதி இல்லாமல் கூட்டரங்கில் வீடியோ எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்கள் வார்டு பகுதியில் உள்ள மக்கள் நலத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் நகராட்சி ஆணையர் (பொறுப்பு)ஜெயப்ரியாவை சந்தித்து கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu