போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ.40 லட்சம் மோசடி செய்த பா.ஜ. பிரமுகர் கைது

கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ணன்.
போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ரூ.40 லட்சம் மோசடி செய்த பா.ஜ.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரது மகன் பார்த்தசாரதி . இவர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
அந்த புகாரில், தான் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும், அங்கு வேலை முடிந்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்பி சொந்த ஊரில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்த நிலையில் தன்னை செங்கோட்டை பகுதியை சேர்ந்த கோமு என்பவரது மகனான பாலகிருஷ்ணன் என்பவர் தன்னை அணுகி தான் போலீஸ் போன்ற தோற்றத்தில் உள்ளதாகவும், தற்போது தமிழக சி.பி.சி.ஐ.டி காவல் துறையில் புதிதாக நுண்ணறிவு உளவு பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு தற்போது ஆள் சேர்ப்பு பணியானது நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
தொடர்ந்து, தனக்கு ஐஜி அன்பு, பரசுராம், வெற்றிவேல் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் தனக்கு நெருக்கமானவர்கள் எனவும், அவர்கள் மூலம் உங்களை அந்த பணியில் சேர்த்து விடுகிறேன் எனக்கூறி சிறுக சிறுக ரூ.40 லட்சம் பணத்தை பெற்றார்.
தொடர்ந்து, வேலை என்ன ஆச்சு என நான் கேட்கும்போது இன்னும் ஒரு வாரத்தில் ரெடி ஆகிவிடும் எனக்கூறி ஒரு வாரத்தில் தன்னை அழைத்து சி.பி.சி.ஐ.டி. உளவுப் பிரிவில் சார்பு ஆய்வாளராக என்னை நியமித்துள்ளதாக கூறி ஒரு பணி நியமன ஆணையும் வழங்கினார்.
அதனை எனக்குத் தெரிந்த ஒருவரிடம் காட்டிய போது அது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, மறுபடியும் பாலகிருஷ்ணனை நான் அணுகி கேட்டபோது என்னை மிரட்டும் தொணியில் பேசினார். தொடர்ந்து, நான் என் குடும்பத்துடன் சென்று என் பணத்தை கேட்ட போது எனக்கு மிரட்டல் விடுத்த நிலையில் பணமும் தர முடியாது, வேலையும் வாங்கித் தர முடியாது எனக்கூறி என்னை மிரட்டினார் என அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, அந்த புகார் மனு மீது உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உத்தரவு பிறப்பித்த நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது பார்த்தசாரதியை ஏமாற்றிய நபர் பா.ஜ.க .நிர்வாகி என்பதும், அவர் செங்கோட்டை நகர முன்னாள் செயலாளர் எனவும், அவர் பார்த்தசாரதியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததும் உறுதியானது.
அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்போது பாலகிருஷ்ணனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தமிழக காவல்துறையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. பிரிவில் புதியதாக உளவு பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக கூறி அதற்குப் போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ரூ. 40 லட்சம் மோசடி செய்த பா.ஜ.க. பிரமுகர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu