கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சல்: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சல்: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு
X

தமிழகத்திற்குள் நுழையும் வாகனத்திற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சலால் தமிழக, கேரளா எல்லையான புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழிப் பண்ணைகளில் அதிக அளவிலான வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

அவற்றை ஆய்வு செய்த போது எச்5 என்1 என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அம்மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழக எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்த உத்திரவிடப்பட்டுள்ளது. ,

தென்காசி மாவட்டம், தமிழக- கேரளா எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தற்போது சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கால்நடை மருத்துவர் தலைமையில் கால்நடை உதவி ஆய்வாளர் உள்பட ஐந்து பேர் ஒரு குழுவாக இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களின் டயர்களில் குளோரின் டை ஆக்சைடு கிருமி நாசினி அளிக்கப்பட்டு தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது

மேலும் கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்ட பறவையினங்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள் தமிழகத்திற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோழிகளை கேரளாவில் இறக்கிவிட்டு மீண்டும் தமிழகம் நோக்கி வரும் வாகனங்கள் சுத்தம் செய்யப்படாமல் வந்தால் அந்த வாகனங்கள் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்படுகிறது.

இந்த நடவடிக்கை தமிழக-கேரளா எல்லைப் பகுதியான புளியரை தொடர்ந்து நடைபெறும் எனவும், பறவை காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவாத வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கால்நடைத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai automation in agriculture