குடிநீர் கிணற்றில் மிதந்த ஐம்பொன் சிலை: பொதுமக்கள் மீட்டு வழிபாடு

குடிநீர்  கிணற்றில் மிதந்த ஐம்பொன் சிலை: பொதுமக்கள் மீட்டு வழிபாடு
X

குடிநீர் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் சிலை.

கடையநல்லூர் அருகே குடிநீர் கிணற்றில் மிதந்த ஐம்பொன் சிலையை பொதுமக்கள் மீட்டு வழிபாடு செய்தனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ளது போக நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் பொது மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஊருக்கு அருகாமையில் போகநல்லூர் ஊராட்சி சார்பில் ஒரு கிணறு தோண்டப்பட்டு அதிலிருந்து பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காலை நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஊராட்சி தண்ணீர் திறப்பாளர் கிணற்று அருகே சென்று மின் மோட்டார் மற்றும் குடிநீர் குழாய்கள் எல்லாம் சரியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்துள்ளார். அப்பொழுது கிணற்றுக்குள் குழாய் சரியாக உள்ளதா? என பார்த்தபோது கிணற்றில் தங்கம் போன்று மின்னியபடி ஒரு சாமி சிலை தண்ணீரில் மிதந்துள்ளது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தண்ணீர் திறப்பாளர் உடனே ஓடி சென்று ஊர் பொதுமக்களிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கடையநல்லூர் போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலரோ, போலீசாரோ இதுவரை வராததால் அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்களே கிணற்றுக்குள் இறங்கி மிதந்த சுமார் 5 கிலோ மதிப்புடைய விஷ்ணு சிலையை மீட்டு அருகே உள்ள கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

பொதுவாக, இந்த பகுதியில் விஷ்ணு சுவாமி வழிபாடு என்பது அதிக அளவில் பொதுமக்களிடம் இல்லை என கூறப்பட்டாலும், விஷ்ணு சிலை எப்படி இந்த கிணற்றுக்குள் வந்தது? ஏதேனும் மர்ம நபர்கள் கடத்திக் கொண்டு வந்து இந்த விஷ்ணு சிலையை இங்கு போட்டார்களா? என போலீசார் தற்போது விசாரணை நடத்தி வரும் சூழலில், ஐம்பொன்னால் ஆன விஷ்ணு சிலை கிணற்றில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!