கனிம வளம் கடத்தலை தடுக்க கோரி தென்காசியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கேரளாவிற்கு கனிம வளம் கடத்தலை தடுக்க கோரி அ.தி.மு.க. சார்பில் தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமான கனரக லாரிகளில் கனிம வளங்களானது கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வரும் சூழலில், தென்காசி மாவட்டத்தில் உள்ள கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
அந்த வகையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தி வரும் சூழலில், இன்று அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமானது செங்கோட்டை பகுதியில் நடைபெற்றது.
தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் பங்கேற்று தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், கனிம வள கடத்தலை அரங்கேற்றி வரும் தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கண்டனகோஷங்களை எழுப்பினர்.
சுமார் 500க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் பங்கேற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி தீவிர படுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சமீப காலமாக கனிம வளங்களானது கொள்ளையடித்து செல்லப்பட்டு வருகிறது. இதனால் தமிழர்களின் எதிர்கால வாழ்வாதாரம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனை தடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய விளைவுகளை தமிழக அரசு சந்திக்க நேரிடும் எனவும், பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு கொடுத்து வைக்கவில்லை எனவும், தமிழர்களின் பெருமையை நிலை நாட்ட உள்ள செங்கோல் டெல்லியில் ஆட்சி செய்வதை காண அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், வருமானவரித்துறையினர் சோதனையை தடுத்து நிறுத்தும் அளவிற்கு தி.மு.க.வினரின் அராஜகம் அதிகரித்துள்ளதாகவும், இதன் மூலமே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் என்ற பெயரில் கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி மீது வாந்தி எடுப்பது போல் அரசியல் நாகரிகம் தெரியாமல் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியிருப்பது கண்டனத்துக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu