ஈரோடு - நெல்லை ரயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிப்பு

ஈரோடு - நெல்லை ரயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிப்பு
X

பைல் படம்.

ஈரோடு - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் முன்பதிவு இல்லாத ரயிலைச் செங்கோட்டை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது

நெல்லை – செங்கோட்டை வழித்தடத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், தற்போது பாலருவி தினசரி ரயிலும், தாம்பரம், மேட்டுப்பாளையம் வாரம் ஒருமுறை செல்லும் அதிவிரைவு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, ஈரோடு- நெல்லை விரைவு ரயிலைச் செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் ஈரோடு - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் முன்பதிவு இல்லாத ரயிலைச் செங்கோட்டை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி ஜனவரி 24 அன்று ஈரோட்டில் இருந்து புறப்படும் திருநெல்வேலி முன்பதிவு இல்லாத ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும். இந்த முதல் சேவையை ஈரோடு ரயில் நிலையத்தில் மதியம் 2 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கொடி அசைத்துத் துவக்கி வைக்கவுள்ளார்.

இதனையடுத்து ஜனவரி 25 முதல் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய முன்பதிவு இல்லாத ரயில் செங்கோட்டையில் இருந்து நீட்டிப்பு ரயில் சேவையாக இயக்கப்படும். இந்த புதிய நீட்டிப்பு சேவைக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஈரோடு - செங்கோட்டை முன்பதிவு இல்லாத ரயில் (16845) தினந்தோறும் ஈரோட்டில் இருந்து மதியம் 02.00 மணிக்குப் புறப்பட்டு இரவு 08.50 மணிக்குத் திருநெல்வேலி வந்து சேரும். பின்பு திருநெல்வேலியில் இருந்து இரவு 08.55 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.10 மணிக்குச் செங்கோட்டைச் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் செங்கோட்டை - ஈரோடு முன்பதிவு இல்லாத ரயில் (16846) செங்கோட்டையிலிருந்து அதிகாலை 05.00 மணிக்குப் புறப்பட்டு காலை 06.25 மணிக்குத் திருநெல்வேலி வந்து சேரும். பின்பு திருநெல்வேலியில் இருந்து காலை 06.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 03.00 மணிக்கு ஈரோடு சென்று சேரும்.

இந்த ரயில்கள் திருநெல்வேலி - செங்கோட்டை பிரிவில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!