ஆலங்குளம் அருகே மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
X

 மின்னல் தாக்கி உயிரிழந்த சொள்ள மாடன்.

மூவரும் ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கும் போது பலத்த மழை பெய்தபோது திடீரென இடியுடன் கூடிய மின்னல் தாக்கியது

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஆணையப்பபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சொள்ளமாடன்(49). இவர் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூலையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் ஆடுகள் வளர்த்து வந்தார். இவர் வேலை முடிந்த பின்னர் மாலை வேளையில் ஆடுகளை வயல்வெளிகளில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வார். அதேபோல் நேற்று ஆடுகளை மெய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

உடன் இவரது உறவினர்களான ஆடுகளை வளர்த்துவரும் அதே ஊரைச் சேர்ந்த நாராயணன்(40) மற்றும் குமரேசன் மகன் சசிதரன்(16) ஆகியோர் தங்களது ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு சென்றுள்ளனர். மூவரும் ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கும் போது பலத்த மழை பெய்துள்ளது. அப்போது திடீரென ஏற்பட்ட இடியுடன் கூடிய மின்னல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூவரையும் தாக்கியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்தனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மூவரையும் மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில் சொள்ளமாடன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். நாராயணன் மற்றும் சசிதரன் ஆகிய இருவரும் சிறிது நேரத்தில் மயக்க நிலையில் இருந்து மீண்டனர்.

தொடர்ந்து அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் மூன்று ஆடுகளும் உயிரிழந்தது. ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் இருந்த உயிரிழந்த சொள்ளமாடன் உடலை மீட்ட கடையம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story