30 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த கல்லூரி மாணவர்கள்
பேராசிரியருக்கு மரியாதை செலுத்திய மாணவர்கள்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் 1990 முதல் 1993 வரை வணிகவியல் துறையில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் ஜி.தேவராஜன் தலைமை வகித்தார். திவான் அஹமது ஷா, ராமரத்தினம், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமி, நிமிஷா இறைவாழ்த்துப் பாடினர். முன்னாள் முதல்வர் எம்.சுந்தரம், முன்னாள் பேராசிரியர்கள் ராஜாமணி, தோத்தாத்திரி, பெருமாள், சூரியநாராயணன், கல்லூரி முதல்வர் எஸ்.மீனாட்சிசுந்தரம், வணிகவியல் துறைத் தலைவர் சிசுபாலன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் முருகானந்தம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கல்லூரி கால அனுபவங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தங்களுக்குப் பயிற்றுவித்த பேராசிரியர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டனர். பேராசிரியர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக ஸ்ரீபரம கல்யாணி கல்லூரி நிறுவனர் அனந்தராம கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆர்.எஸ்.சிவராமன் வரவேற்றார். ஆ.சை.மாணிக்கம் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனியப்பன், ஜார்ஜ், போத்திராஜ், ராஜநாராயணன், பா.பிரகாஷ், ராஜேந்திரகுமார், அருள்பிரகாஷ், அருண்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து கல்லூரி நண்பர்களை சந்திக்க வந்த மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியையும், உணர்ச்சிபூர்வமான ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.பள்ளி, கல்லூரி காலம் என்பது வாழ்வில் மறக்க முடியாத காலங்களாகும். பல்வேறு இனிமையான நினைவுகளை கொண்டதாகும். எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் அந்த நினைவுகள் இனிமையான நினைவுகளாகவே இருக்கும்.
அந்த நினைவுகளை அதே கல்லூரியில் படித்த மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது மேலும் மகிழ்ச்சியான தருணங்களாக அமையும். அந்த மாதிரியான தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்த எங்களது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என்றும், நாங்கள் கல்லூரி மாணவராக இருந்தோம் இன்று எங்களது குழந்தைகள் அதே கல்லூரியில் மாணவர்களாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழைய மாணவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu