மாநில கலைப் போட்டிக்கு சங்கரன்கோவில் வடநத்தம்பட்டி பள்ளி மாணவி தேர்வு...

மாநில கலைப் போட்டிக்கு சங்கரன்கோவில் வடநத்தம்பட்டி பள்ளி மாணவி தேர்வு...
X

மாநில அளவிலான கலைப் போட்டிக்கு தேர்வான அரசு பள்ளி மாணவி சுவாதி.

மாநில அளவிலான கலைப் போட்டிக்கு சங்கரன்கோவில் அருகேயுள்ள வடநத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவர்களின் நலனுக்காக காலை சிற்றுண்டி, இலவச சீருடை, விலையில்லா மிதிவண்டி, இலவச பேருந்து பயண அட்டை என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதேபோல் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைத்திறனையும் மேம்படுத்தி வெளிக்கொண்டு வரும் வகையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவு சார் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் என மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநிலம் முழுவதும் கலைத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வட்டார அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் மெல்லிசை தனிப்பாட்டு போட்டியில் சங்கரன்கோவில் வட்டாரம் வடநத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் மாணவி சுவாதி வெற்றி பெற்றார்.

வட்டார அளவில் தேர்வு பெற்ற மாணவி சுவாதி, அதன் பிறகு தென்காசியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டார். மாவட்ட அளவில் தென்காசியில் நடைபெற்ற மெல்லிசை தனிப்பாட்டு போட்டியிலும் வடநத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி சுவாதி முதலிடம் பெற்று தமிழ்நாடு மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவி சுவாதிக்கு, வடநத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்ராஜ், ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் மாணவ மாணவிகள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி