ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!

ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4  பேர் கைது..!
X

நூதன முறையில் மோசடியில் ஈடுபடுபவர்களை படத்தில் காணலாம்

ரூ.100 கொடுத்டுவிட்டு ரூ.500 கொடுத்ததாக ஏமாற்றும் நாகரிக கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குளம் பகுதியில் கடைக்காரர்களின் கவனத்தை திசை திருப்பி 100 ரூபாய் கொடுத்துவிட்டு 500 ரூபாய் கொடுத்ததாக கூறி நூதன முறையில் பணம் திருடியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள கடைகளில் சில பேர் உணவு அருந்திவிட்டு கடை உரிமையாளர்கள், கல்லாவில் அமர்ந்திருப்பவர்கள் கவனத்தை திசை திருப்பி ரூ. 100 கொடுத்து ரூ. 500 கொடுத்ததாகக் கூறி சில்லறை பெற்றுச் செல்வதாக தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து ஆலங்குளம் காவல்துறையினர் அவர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி சுடலை மாடன் கோயில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அங்கு ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த 2 பெண் உள்பட 4 பேரைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் தான் மற்ற கடைகளிலும் நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பதும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள அய்யங்கோவில்பட்டியைச் சேர்ந்த குரும்பன்(60), அவரது மனைவி முனியம்மாள்(50), அவர்களது உறவினர்கள் பிச்சையா(59), மொக்கத்தாய்(55) ஆகியோர் என்பதும் தெரிய வந்தது.

இவர்கள் திருவிழா சமயங்களில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குடும்பப் பங்கான தோற்றத்தில் ஆண்கள் உயர் ரக வேஷ்டி சட்டையிலும் பெண்கள் நவநாகரிக சேலையிலும் வலம் வந்து தாங்கள் உண்ணும் உணவிற்கு பணம் கொடுப்பது போன்று 100 ரூபாய் கொடுத்தால் தாங்கள் 500 ரூபாய் கொடுத்ததாகவும் மீதி சில்லறை வேண்டும் என கேட்டு வாங்கி நூதன முறையில் பணம் திருடுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களைக் கைது செய்த காவல்துறையினர் ஆலங்குளம் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் அவர்கள் மீது தேனி மாவட்டத்தில் ஏற்கனவே சில வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஆலங்குளம் பகுதிகளில் கடைகளில் பணம் கொடுப்பது போன்று கொடுத்துவிட்டு அதிக அளவில் பணத்தை திரும்ப பெற்று நூதன முறையில் ஈடுபட்ட நான்கு பேர் கும்பலின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!