கடையத்தில் செல்லம்மாள் பாரதி மையம்: சபாநாயகர் அடிக்கல்நாட்டினார்.

கடையத்தில் செல்லம்மாள் பாரதி மையம்:  சபாநாயகர் அடிக்கல்நாட்டினார்.
X

செல்லம்மாள் பாரதி மைய அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய  சபாநாயகர் அப்பாவு 

கடையத்தில் 2 கோடியில் அமைக்கப்படவுள்ள செல்லம்மாள் பாரதி மையத்திற்கு சபாநாயகர் அப்பாவு இன்று அடிக்கல் நாட்டினார்.

தென்காசி மாவட்டம் கடையத்தில் சேவாலயா சார்பில் ரூ. 2 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள செல்லம்மாள் பாரதி மையத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.

பாரதியார் மனைவி செல்லம்மாளின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையத்தில் செல்லம்மாள் பாரதி மையம் அமைக்க சேவாலயா நிறுவனம் முடிவு செய்தது. இதையடுத்து பாரதியார் பெயரில் கடையத்தில் இயங்கி வந்த நூலகக் கட்டடத்தைப் புதிப்பித்து அங்கு செல்லம்மாள் பாரதி மையம் அமைத்து பாரதி செல்லம்மாளின் முழு உருவச் சிலையும் அமைத்துத் தருவதாகவும் அதற்கு அனுமதி தருமாறும் கோரியதையடுத்து நூலகத் துறை அனுமதி வழங்கியது.

இதையடுத்து செல்லம்மாள் பாரதி மையத்திற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, கல்வெட்டைத் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசும் போது, பாரதி கடையத்தில் வாழ்ந்த போது மனைவி தோளில் கை போட்டுச் செல்ல சமுதாயம் அனுமதிக்கவில்லை. அதே பகுதியில் பாரதியார் செல்லம்மாளின் தோளில் கை போட்டது போல் சிலை வைக்கப்படுகிறது. பாரதியார் காசியில் தங்கியிருந்த போது அவரை கடையத்திற்கு வரச்சொல்லி செல்லம்மாள் கடிதம் எழுதியதற்கு பதில் எழுதிய பாரதி கவலைப்படாதே, அச்சம் கொள்ளாதே, அச்சமாக இருந்தால் தமிழைப் படி, தமிழைக் கற்றுக் கொண்டே இரு, தமிழ் வாசி, தமிழைப் படித்துக் கொண்டே இரு அச்சம் வராது என்று பதில் எழுதினார்.

கால்டுவெல்லுக்கு முன்பே உலக மொழிகளில் சிறந்த மொழி தமிழ் மொழி என்று கூறியவர் பாரதி. இந்திய தேச ஒற்றுமையை உணர்த்தும் வகையில் 30 கோடி முகமுடையாள் என்றும் சிந்தனை ஒன்றுடையாள் என்றும் பாடியவர் பாரதி. பாரதி தனது குடும்பத்திற்காகவோ, உறவினர்களுக்காகவோ வாழவில்லை. இந்தியாவிற்காகவும், தமிழுக்காகவும் வாழ்ந்தார். தான் ஒரு இந்தியன் என்று கூறி பெருமையோடு வாழ்ந்து சென்றவர் பாரதி. 1973ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் பாரதியாரின் வீட்டை நினைவுச் சின்னமாக்கியவர் கருணாநிதி. இன்று ஸ்டாலின் பாரதியாரின் நினைவு நாளை அரசு சார்பில் ஓராண்டு கொண்டாடுவதாக அறிவித்திருக்கிறார் என்று கூறினார்

நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தர்யா, மாவட்ட நூலக அலுவலர் லெ.மீனாட்சிசுந்தரம், திமுக மாவட்டப் பொறுப்பாளர் சிவ பத்மநாபன், எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன், சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா, ஒன்றியப் பொறுப்பாளர்கள் ஜெயக்குமார், மகேஸ் மாயவன், ஒன்றியப் பெருந்தலைவர்கள் கடையம் செல்லம்மாள், கீழப்பாவூர், ஆலங்குளம் திவ்யா, மற்றும் திமுக நிர்வாகிகள், ஊராட்சித் தலைவர்கள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், நூலகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil