கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் 5 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு
எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்கள்.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தும் வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் தென்காசி செங்கோட்டை கடையம் ஆலங்குளம் பாவூர்சத்திரம், கடையநல்லூர் , வாசுதேவநல்லூர் புளியங்குடி, சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி என அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
இவ்வாறு மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல முறையான வடிகால் இல்லாமல் நீர் தேங்கியுள்ளது. அந்த நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மற்றும் கிருமிகளால் பல்வேறு நோய் தாக்கங்களும் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் சில இடங்களில் அதனை மீறி நோய் தொற்றுகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த காய்ச்சலை சரி செய்ய சுகாதாரத் துறையினரும், சுகாதாரப் பணியாளர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தொடர்ந்து நோயின் தாக்கம் என்பது அவ்வப்போது ஏற்படத் தான் இருக்கிறது.
அரசு எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிப்பதில்லை எனவே பொதுமக்களாகிய நாம் தான் உரிய முறையில் சுகாதாரத்தை பேணி நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்.
தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள ஆசீர்வாதபுரம் பகுதியில் சேர்ந்த ஆசீர் ஜெபக்குமார் (வயது 23),சுதன் (16), செகேரியர் ஸ்டீபன் (36), ஜெனிஸ் (15) ஆகியோருக்கு கடந்த சில 4 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் அங்கு பரிசோதனை செய்ததில் 4 பேருக்கும் எலிக்காச்சல் இருந்தது சோதனையில் தெரியவந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 4 பேரும் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
தொடர்ந்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர் உத்தரவின் படி கடையம் வட்டாரம் மருத்துவ அலுவலர் பழனி குமார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் ஆகியோர் ஆசீர்வாதபுரம் சென்று சுத்தம் செய்து சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர். மேலும் அவர்களுக்கு தடுப்பு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதேபோல் கடையம் அருகேயுள்ள வீராசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த நூர்ஜகான் என்ற பெண்ணும் எலிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் உள்ள தேங்கிய கழிவு நீர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பகுதியில் மேலும் யாரேனும் இதுபோன்ற காய்ச்சல் ஏற்பட்டு பாதிப்படைந்து உள்ளார்களா? என்று ஆய்வு செய்து மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். மழைக்காலம் என்பதால் கலங்கலாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதனை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu