தென்காசி அருகே கிறிஸ்துமஸ் விழாவிற்கு முன்பாக வழங்கப்பட்ட பாயாசம்

பாயாசம் வழங்குவதற்கு முன்பாக ஆராதனை நடைபெற்றது.
130 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேட்டூர் பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று நடத்தும் பாயாச பண்டிகை நடைபெற்றது.இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காலகட்டங்களில் ஏற்பட்ட காலரா, பெரியம்மை போன்ற நோய்களுக்கு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அப்போதைய காலகட்டங்களில் மன உறுதியும் நம்பிக்கையுடன் ஏதேனும் செய்து உயிர் பிழைத்து விடலாம் என்ற அடிப்படையில் இறைவனை மனம் உருகி வேண்டி மக்கள் வாழ்ந்துள்ளனர்.அந்த நம்பிக்கையை இன்று வரை பழக்க வழக்கமாகவும், ஐதீகமாகவும் பின்பற்றி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேட்டூரில், 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த சி.எஸ்.ஐ.பரிசுத்த திரித்துவ ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் பாயாச பண்டிகை திருவிழா 100 ஆண்டுகளுக்கும் மேல், ஆண்டு தாேறும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்திய நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் கிராமத்தில் கொடிய காலரா நோய்க்கு அதிகமான மக்கள் பலியாகியதாகவும், அப்போது இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் பாயாசத்திற்கு தேவையான அரிசி, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை நேர்ச்சையாக, வீடு வீடாக சென்று பெற்று தண்ணீர் சுமந்து வந்து பாயாசம் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கிய பிறகு நோயின் தாக்கம் குறைந்ததாக இப்பகுதி மக்கள் ஐதீகமாக கருதி வருகின்றனர். இதனை நினைவு கூர்ந்து நேற்று பாயாச பண்டிகை கொண்டாடப்பட்டது.
நேற்று காலை ஆண்களே நேர்ச்சையாக பெற்ற பொருட்களை கொண்டு 40 பெரிய பாத்திரங்களில் பாயாசம் தயார் செய்து வழங்கினர். இவ்விழாவினை மேட்டூர் சேகர உதவி குரு ஜோயல் சாம் மெர்வின் ஜெபம் செய்து துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் ஆசிர்வாத புரத்தில் உள்ள தேவாலயத்தில் உள்ள இளைஞர்கள் தங்கள் பகுதியில் நேர்ச்சை பொருட்களைப் பெற்று 20 பெரிய பாத்திரத்தில் பாயாசம் தயார் செய்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வீடு வீடாக சென்று அனைவருக்கும் பாயாசம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu