நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விவசாயிகளுக்கு வாக்குறுதி
செய்தியாளர்களை சந்தித்த நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்.
விவசாயம் சார்ந்த கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் கூறினார்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பாரதீய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோவிலில் நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தரிசனம் செய்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது :
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கும் தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் இந்த ஆலயத்தை சுற்றி கிரிவல பாதை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது வனப்பகுதியை ஒட்டி அமைந்திருப்பதால் அதற்கான ஆய்வுகளை நடத்தி உறுதியாக கிரிவல பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடையம் சுற்று வட்டார பகுதியில் எலுமிச்சம்பழம் அதிகளவு உற்பத்தி செய்யப்படுவதால் இப்பகுதியில் எலுமிச்சைக்கான குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கடையத்தில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயம் சார்ந்த பகுதிகளாக இருப்பதால், வனவிலங்கு பட்டியலில் இருந்து பன்றியை நீக்க வேண்டும் என்று பெரும்பாலான விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நான் வெற்றி பெற்று விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
அதனைத் தொடர்ந்து காவூர் பகுதியில் அவருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu